இன்றைய நவீன உலகில் சிறுநீரகக் கோளாறும் புற்றுநோயுமே வளர்ந்துள்ளன!

புதன் செப்டம்பர் 18, 2019

தமிழகத்தில் இருந்து அண்மையில் பிரான்சுக்கு வருகை தந்த சித்த மருத்துவர் திரு. எம்.ஏ.ஹூசைன் அவர்கள்  தமது மருத்துவ மற்றும் வாழ்க்கைப் பயணம் குறித்து  எமது ஈழமுரசு இதழுக்கு வழங்கிய சிறப்பு  நேர்காணலின் தொடர்ச்சி இது.

 திருவருட்பா உங்களை மாற்றியமைத்தது. அதனைத் தொடர்ந்து வேறுநூல்களையும் நாடிச் சென்றீர்களா?

20.03.1972 திங்கட்கிழமை 11.30 மணியளவில் என்னை மாற்றிக்கொள்கின்றேன். அதற்குக் காரணமாக அமைந்
தது திருவருட்பா. அதற்கு முன்பு இருந்த உலகவாழ்வியல் வேறு, தற்போதுள்ள வாழ்வியல் வேறு. திரு
வருட்பாவை ஆழமாக நோக்கியபோது, வள்ளலாருக்கு இந்த ஞானம் எவ்வாறு தோன்றியது என்று பார்த்தால், திருமந்திரத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

அதன்பின்னர் திருமந்திரத்தைத் தேடிப்போனேன். திருமந்திரம் கிடைத்தது. அதில் ஆழ்ந்த விளக்கங்கள் இருந்தன. அது எனக்கும் மிகவும் பிடித்துப்போய்விட்டது. அதில் உள்ள அறிவியல் கூறுகளை எடுத்துப் பார்த்தபோது, அது சமய நூல் இல்லை.  அது ஓர் அறிவியல் நூல் என்று எனக்கு மனதில்பட்டது. அதற்குப்பின்னர் எதைப் பேசினாலும் திருமந்திரத்தைத் தொட்டுத்தான் பேசுவேன்.

திருமந்திரம் முதல், அதற்குப்பின் திருக்குறள், பின்னர் திருவருட்பா என்று கூறுவேன். மாற்று மொழிகளில் ஏதா
வது நன்மை இருக்கும் என்று பார்த்தால், குர் ஆனை எடுத்துப்பார்க்கலாம். குர் ஆனில் வாழ்க்கைக்குத் தேவை
யான நிறைய விடயங்கள் நெறிப்படுத்தப்பட்டு  வைக்கப்பட்டுள்ளன. சமயம் என்று பார்க்கும் போதுதான் சிக்கல். குர்ஆனையும் திருவருட்பாவையும் எடுத்துப்பார்த்தால் இரண்டும் இரண்டு தண்டவாளங்கள். இரண்டும் ஒரே விடயத்தைத்தான் எடுத்து உரைக்கின்றன. 

ஆனால், வாழ்வியலில் உள்ள நடைமுறையை எடுத்துப்பார்த்தால்,  ஒரு விடயம் நடைமுறையில் குர் ஆனில் இஸ்லாத்திற்கும் திருவருட்பாவில் உள்ள சன்மார்க்கத்திற்கும்  வேறுபடுகின்றது. அதாவது, திருவருட்பா மாமிசத்தை உண்ணவேண்டாம் என்று சொல்கின்றது. ஆனால், இஸ்லாமிய நடைமுறையில் மாமிசம் உணவில் முக்கிய பங்குவகிக்கின்றது. ஆயினும் மாமிசத்தை உண்ணும்படி குர் ஆனில் எங்கேயும் சொல்லப்படவில்லை.

குர் ஆனும் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளும் இரண்டு கண்களைப்போன்றது.  என்னைத் திருத்திய அப்பாவின் நண்பர் ஓர் இஸ்லாமியர். அவர் ஏன் ஒரு குர் ஆனைத் தந்திருக்கலாமே. அப்படித்தராமல் ஏன் திருவருட்பாவைத் தந்தார். அதில் எத்தனையோ பாடல்கள் இருக்கின்றன. அவற்றுக்கு மத்தியில் மாமிசம் தொடர்பான பாடலையே எடுத்துத் தந்துள்ளார்.

அன்றோடு நீங்கிய பின்னரே எனக்கு மனசு மிகவும் தெளிவாயிற்று, பின்னர் திருமந்திரத்துக்குள் சென்று,  அதன்
பின்னர் திருவாசகத்திற்குள் வந்தேன். முன்பு அப்பா என்னை குர் ஆன் ஓதவைத்தார்.  எனது அப்பா எனக்கு குர் ஆன் ஓதித்தராமல் இன்னொரு இமாமிடம் சொல்லி ஓதவைத்தார். காரணம் நான் தப்பாக ஓதினால் தண்டிக்க நேரிடும் என்பதற்காகவே அவ்வாறு செய்தார்.

சித்த மருத்துவத்துறையில் எப்படி உங்களுக்கு ஈடுபாடுவந்தது என்பதைப் பற்றிக் கூறுங்கள்?

ஈடுபாடு என்று சொல்லமுடியாது. நாங்கள் தலைமுறையாக வந்தவர்கள். எமது குடும்பத்திற்கு என்று சில மருத்துவ நடைமுறைகள் உள்ளன. அவற்றைக் கடைப்பிடித்து செய்துவருகின்றோம். அத்தோடு பொதுவாக உள்ள முறைகளையும் நாங்கள் பின்பற்றிவருகின்றோம்.

எனக்கு இந்த சித்த மருத்துவத்தினை ஒரு தொழிலாக பணம் சம்பாதிப்பதைவிட மிகவும் வருத்தப்படுபவர்களை முடிந்தவரை காப்பாற்ற என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்கின்றோம்.

சொந்தமாக மருந்து செய்து மக்களுக்குக் கொடுத்து, குணப்படுத்தி வருகின்றோம். அரசாங்கத்தின் சித்தமருத்தவக்கல்லூரி சென்னையில் உள்ளது. அதில் உள்ள மாணவர்கள் என்னிடம் வந்து பயிற்சி எடுத்துக்கொள்கின்றார்கள்.

சித்தவைத்தியமா, அந்த மருத்துவம் சிறுநீரகத்தை பாதிக்கும், குருதியைப் பாதிக்கும்,  மூளையை பாதிக்கும் அதனைச் சாப்பிடவேண்டாம் என்று நவீன மருத்துவர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுவார்கள். ஒரு
வகையில் அதனை நாம் ஒத்துக்கொள்ளவேண்டும் நியாயமாக, ஒரு பொருளை எடுத்தால் அதில் உள்ள விசத்தன்மையை நீக்காத வரைக்கும் அது விசம்தான். விசத் தன்மையை நீக்குவதற்கு சில முறைகள் இருக்
கின்றன. 

111

இவற்றை எல்லாம் மாணவர்களுக்கு நான் சொல்லிக்கொடுக்கின்றேன். ஒரு குழு பட்டயம் வாங்கி வெளியில் வந்துள்ளது.  அவர்கள் எல்லாம் பொதுவாக இருக்கும் சித்த மருத்துவர்கள் போன்று இருக்கக் கூடாது. 

இவர்களை சரியான முறையான சித்தமருத்துவர்களாகக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்திலே நான் வழிநடத்திக்கொண்டு இருக்கின்றேன். ஏனென்றால், நவீன மருத்துவர்கள் என்னசெய்வார்கள் என்றால், ஒரு கட்டணத்தை வாங்குவார்கள் ஒரு சீட்டில் மருந்தை எழுதிக்கொடுத்து அதனை சாப்பிடுங்கள் என்று சொல்வார்கள்.

நவீன மருத்துவர்களின் அறிவியல் நம்பிக்கை எதன் அடிப்படையில் இருக்கின்றதென்றால், மருந்து தயாரிக்கும் நிறுவனம், மருந்து விற்பனை நிலையம், அவற்றை கொண்டுவந்துசேர்க்கும் பிரதிநிதி. இவர்களை நம்பித்தான் நவீன மருத்துவர்களின் பணி உள்ளது.

அந்த வாழ்க்கையைத்தான் இன்று பட்டம்படித்த சித்தமருத்துவர்களும் வாழ்கின்றார்கள்.  1944 ஆம் ஆண்டு சென்னையில் எம்மால் தொடங்கப்பெற்றது எம்காப் என்ற நிறுவனம். அதில் 700 வகையான மருந்துகளை தயாரிக்
கின்றோம்.

தற்போது 17 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அங்கு தயாரிக்கப்படும் மருந்துகள் நவீனமுறைப்படி ஆய்விற்குட்படுத்தப்பட்டுத் தயாரிக்கப்படுகின்றன.

அதுதான் இன்று உலகம்முழுவதும் சித்த, ஆயுர்வேத மருத்துவத்தை நிலை நிறுத்துவதற்குக் காரணம். ஒரு மருந்தை நாம் தயாரிப்பதற்கு படும்பாடு, ஆனால் ஒரு கிலோ மருந்தைத் தயாரிப்பதற்கு எவ்வளவு சிரமப்படவேண்டும். டன்கணக்கில் தயாரிக்க எவ்வளவு சிரமம் இருக்கும்.

சித்தமருத்துவமுறையில் 4 ஆயிரத்து 448 நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று அகத்திய மாமுனிவர் கூறியுள்ளார்.

ஆனால், நவீன மருத்துவத்தில் 300 முதல் 400 வரையான நோய்களைக் கூட சரியாகக் கண்டுபிடிக்கவில்லை. கண்டுபிடித்த நோய்களுக்குக் கூட அவற்றைத் தீர்ப்பதற்குச் சரியான தீர்வுகாணவில்லை. மருந்துகள் வருகின்றன. சிறிதுகாலம் கழித்து அவை தோல்வியடைந்துவிடுகின்றன. ஆனால், சித்தமருத்துவத்தில் கண்டுபிடிக்கப்படும் ஒரு மருந்துகூட தோல்வியடைவதில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படியிருந்ததோ, ஆயிரம்ஆண்டுகளுக்குப் பின்னரும் அப்படியே இருக்கும்.

நவீன மருத்துவம் மக்களுக்குத் தேவையில்லை என்று சொல்கின்றீர்களா?

நவீன மருத்துவம் தேவையா, இல்லையா என்று கேட்டால், தேவையயன்றே சொல்லவேண்டும். நான் திடீரென இங்கே விழுந்துவிட்டால் நீங்கள் என்னை நவீன மருத்துவரிடமே கொண்டுசெல்வீர்கள். எனவே நவீன மருத்துவர்களையும் ஆதரிக்கவேண்டும்.

ஆனால், எதை எல்லாம் சேர்த்து சிகிச்சை செய்தால் ஒருவரைக்காப்பாற்றலாம் என்றுபார்த்தால், எல்லோரும் ஒன்று கூடி இங்கு சரக்கிருக்கும் அவர்களிடம் அறிவிருக்கும் இரண்டும் ஒன்று சேர்ந்தால் மக்களுக்கு நல்ல விடயம் போய்ச் சேரும். அந்த நம்பிக்கையில் தான் இன்று ஓடிக்கொண்டிருக்கின்றோம். 

அவ்வாறான மருத்துவமனை இல்லவே இல்லை என்றே சொல்லலாம். பணத்தில் தான் எல்லா மருத்துவமனைகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

நவீன மருத்துவமனைகள் பல மனிதர்களின் உயிரோடு விளையாடுகின்றன. இறந்த உடல்களை வைத்து வைத்தியம் பார்க்கின்றனர்.

நான் நாடித்துடிப்பை வைத்துச் சொல்லுவேன். உயிர் இருக்கின்றதா என. வயிற்றில் உள்ள குழந்தையைச் சொல்வேன் அது ஆணா அல்லது பெண்ணா என்றும் இது சரியாகப் பிறக்குமா என்றும் சொல்வேன். ஏனென்றால் அந்த நாடிப் பயிற்சியில் நாங்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றோம்.   

இன்றைய நவீன உலகில் சித்தமருத்துவத்துறை எவ்வாறான சவால்களை எதிர்கொள்கின்றது?

மருத்துவம் எனும்போது, இன்றைய மக்கள் வெளியிலே வைக்கப்பட்டிருக்கும் பெயர்ப்பலகையில் மருத்துவரின் பெயருக்குப் பின்னால் எத்தனை பட்டங்கள் இருக்கின்றன என்பதை எண்ணிப் பார்த்துச் செல்கின்றார்கள்.

இது சித்த மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் இருந்து  வருகின்றது. சித்த மருத்துவத்தில் நன்மை உள்ளது என்று சொன்னாலும் சாதாரண மக்கள் இதனை நம்பி வருவது குறைவு என்றுதான் சொல்லமுடியும்.

ஆனால், அதனையும் மீறித் தமிழகத்தில் எல்லா மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவத்திற்கு என்று ஒரு பிரிவு உள்ளது. அதில் காலையில் இருந்து மாலை வரை கூட்டம் நிரம்பியிருக்கும்.

மக்களுக்கு நம்பிக்கை வந்தாச்சு, நிறைய சித்த மருத்துவர்கள் விளம்பரங்கள் செய்து, மக்களைத் திரட்டியுள்ளார்கள். ஒரே நோயுடைய இருவரை ஒருவர் நவீன மருத்துவரிடமும், மற்றையவர் சித்தமருத்துவரிடமும் சிகிச்சை பெறும்போது, சித்தமருத்துவரிடம் சென்றவர் குணமடைந்தால், அந்தச்செய்தி உலகமக்களை சித்த மருத்துவத்தை நோக்கித் திரும்பிப்பார்க்கவைக்கும்.

இந்தக்காலம் என்று வரும் என நான் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.  

இன்று எந்த நோயின் தாக்கம் மக்களை அதிகம் பாதிக்கின்றது?

சித்த மருத்துவத்துறையைப் பொறுத்தவரையில், மஞ்சள் காமாளை நோயாளர்கள் அதிகமாக வருகின்றார்கள். இது அந்தக்காலம் முதல் இன்றும் அதேநிலையில் தான் இருந்துவருகின்றது. மஞ்சள்காமாளையை சித்த மருத்துவத்தால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்ற நிலை இன்றும் உள்ளது.

இந்தியாவில் நவீன மருத்துவத்துறையைப் பார்த்தால், அதிகமான நோயாளர்களாக சிறுநீரகக் கோளாறு மற்றும் புற்றுநோயினால் பாதித்தவர்களே சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர்.

அதற்குக் காரணம் என்னவென்று எமது கண்ணோட்டத்தில் பார்த்தால், முன்பு தேநீர்கடைக்குச் சென்றால் பத்திரிகை பார்த்தபடி தேநீர் அருந்துவோம், முடிவெட்டும் கடைக்குச் சென்றால் பத்திரிகை பார்த்துக்
கொண்டு முடிவெட்டி வருவோம். இன்று திரும்பும் இடமெல்லாம் பிரியாணிக் கடை வந்துவிட்டது. எந்தளவிற்கு பிரியாணிக் கடைகள் வளர்ந்துள்ளனவோ, அந்தளவிற்கு சிறுநீரகக் கோளாறும், புற்றுநோயும் வளர்ந்துள்ளன.

(அடுத்த இதழிலும் தொடரும்)

சந்திப்பு-கந்தரதன்

நன்றி: ஈழமுரசு