இலங்கைத் தமிழருக்கு 'இரட்டைக் குடியுரிமை'!

செவ்வாய் பெப்ரவரி 25, 2020

பேரவையில் உள்நோக்கத்துடன் பொய்யுரைத்த அமைச்சரின் மீது உரிய நடவடிக்கை அவசியமானதாகும். இரட்டைக் குடியுரிமை என்ற சட்டப்படி சாத்தியமற்ற ஒன்றை நிலைநிறுத்த முயற்சிக்கும் அதிமுக அரசின் நிலைப்பாடு பொய் மட்டுமல்ல பச்சைத் துரோகம் என்று தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று விடுத்துள்ள அறிக்கை:

'' 'தி இந்து' ஆங்கில நாளிதழில் (25.02.2020) அன்று இரட்டைக் குடியுரிமை குறித்துத் தீட்டப்பட்டுள்ள தலையங்கம், இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் கீழும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படியும் எவருக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றது.

இந்தியக் குடியுரிமைச் சட்டத்தை கடந்த 2003-ம் ஆண்டு திருத்தியபோதுகூட, இந்திய வம்சாவளியினராக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு குறிப்பிட்ட சில உரிமைகளை மட்டும் இந்தியாவில் வழங்க வகை செய்யப்பட்டுள்ளதையும், தாங்கள் இந்தியாவில் வாக்களிக்கும் உரிமையையோ அல்லது நிலம் போன்ற சொத்துகளை வாங்குவதற்கோ அனுமதி இல்லை எனவும் அத்தலையங்கம் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளது.

மேலும், கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அன்றைய முதல்வர் ஜெயலலிதா இலங்கைத் தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படும் எனப் பிரச்சாரம் செய்ததையும், அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில் இலங்கைத் தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்ததையும் 'தி இந்து' நாளேடு குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் 08.01.2020 அன்று உரை நிகழ்த்திய திமுக தலைவர் ஸ்டாலின், இலங்கைத் தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கிட சட்டத்தில் இடமே இல்லாதபோது ஆளுநர் உரையின் வாயிலாக அரசு அது குறித்துத் தெரிவித்திருப்பது சாத்தியமற்ற ஒன்று என ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் இரட்டைக் குடியுரிமை வழங்க வகை செய்யப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா தெரிவித்ததும், ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதும் முற்றிலும் சாத்தியமே எனக் கூசாமல் உண்மைக்கு மாறான தகவலை உரத்துக் கூறினார்.

ஆயினும், தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய உள்துறை இணை அமைச்சர் மாநிலங்களவையிலேயே, இரட்டைக் குடியுரிமை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படியோ அல்லது தற்போதைய குடியுரிமைச் சட்டத்தின் (CAA) அடிப்படையிலோ அனுமதிக்க இயலாத ஒன்று எனத் தெளிவாக அறிவித்திருந்தார்.

எனவே, சட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட முடியாத இரட்டைக் குடியுரிமையை சட்டப்பேரவையிலேயே அதை நிறைவேற்றுவது சாத்தியமே என உண்மைக்குப் புறம்பாக வாதிட்டு அவையைத் தவறாக வழி நடத்தியதுடன், நீண்ட பல வருடங்களாக இந்தியக் குடியுரிமை பெறுவது ஒன்றே தாங்கள் அனுபவித்து வரும் அனைத்துத் துயரங்களுக்கும் சரியானதொரு நிரந்தரத் தீர்வாக இருந்திட முடியும் என தீர்க்கமாக நம்பிக்கையுடன் தமிழகத்தில் உள்ள முகாம்களிலும், வெளியிலும் வசிக்கும் ஏறத்தாழ 95,000 இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உரிமை மீறல் பிரச்சினை ஒன்று கடந்த 18 -ம் தேதி பேரவையில் எழுப்பப்பட்டது.

இது குறித்து விவாதத்திற்குப் பின்னர் அமைச்சர் மீது உரிமை மீறல் பிரச்சினை ஏதுமில்லை எனப் பேரவைத் தலைவர் தெரிவித்த நிலையில் அதனைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மறுநாள் (19.02.2020) அன்று சட்டப்பேரவை கூடியபோது, உரிமை மீறல் பிரச்சினை விவாதத்தின்போது முந்தையநாள் தான் கூறிய கருத்துகளுக்கு வருத்தம் தெரிவிக்காததுடன், மீண்டும் இரட்டைக் குடியுரிமை சாத்தியமே என வலியுறுத்தி அதுவே அதிமுக அரசின் நிலைப்பாடு என நியாயம் கற்பிக்க முயன்ற தமிழ் ஆட்சிமொழி அமைச்சரின் உள்நோக்கம் மிக்க பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து அவர் மீது மீண்டும் உரிமைப் பிரச்சனை ஒன்றினை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுப்பினார்.

ஆனால், பேரவைத் தலைவர் அனுமதி மறுத்த நிலையில் அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்து செய்தியாளர்களைச் சந்தித்து பேரவைத் தலைவரின் பாரபட்சமான நடவடிக்கைகளை விளக்கினோம். திமுகவைப் பொறுத்தமட்டில், 'சட்டவிரோதக் குடியேறிகள்' என்னும் பிரிவின் கீழ் இலங்கைத் தமிழர்களைக் கொண்டு வருதை முற்றிலும் நீக்கி அவர்கள் இந்தியக் குடியுரிமை பெற்ற மக்களாக இந்தியாவிலேயே தொடர்ந்து வகிக்கவும், உரிய உரிமைகளைப் பெறவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசம், மாநில அரசும், உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே உணர்வுபூர்வமானதும் உறுதியானதுமான நிலைப்பாடாகும்.

பேரவையில் உள்நோக்கத்துடன் பொய்யுரைத்த அமைச்சரின் மீது உரிய நடவடிக்கையும் அவசியமானதாகும். இரட்டைக் குடியுரிமை என்ற சட்டப்படி சாத்தியமற்ற ஒன்றை நிலைநிறுத்த முயற்சிக்கும் அதிமுக அரசின் நிலைப்பாடென்பது உண்மையிலே இரட்டை வேடம் என்பதோடு, தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இழைக்கப்படும் மாபெரும் அநீதி மட்டுமல்ல, கடைந்தெடுத்த பச்சைத் துரோகமாகும்".

இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.