எனது கணவரை கடந்த மாதத்தில் இருந்து காணவில்லை!

திங்கள் பெப்ரவரி 10, 2020

குஜராத் மாநிலத்தில் படேல் சமூக மக்கள் இட ஒதுக்கீட்டிற்காக போராடிய ஹர்திக் படேலை கடந்த 18-ந்திகதியில் இருந்து தொடர்பு கொள்ள முடியவில்லை என அவரது மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு படேல் சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஹர்திக் படேல் போராட்டத்திற்கு தலைமை தாங்கி போராட்டத்தை வழி நடத்தினார். இதனால் அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. அதில் ஒன்று தேசத்துரோக வழக்கு.

இந்த வழக்கு தொடர்பாக அவருக்கு நீதிமன்ற  பிணையில்  வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனால் அவரை கடந்த மாதம் 18-ந்திகதி காவல் துறையினர்  கைது செய்தனர். பின்னர் நான்கு நாட்கள் கழித்து ஹர்திக் படேல் பிணை  பெற்றார். ஆனால், காவல் துறை  மேலும் இரண்டு வழக்கு தொடர்பாக அவரை கைது செய்தனர். பின்னர் ஜனவரி 24-ந்திகதி இந்த இரண்டு வழக்குகளிலும் பிணை பெற்றார்.

இருந்தாலும் கடந்த 7-ந்திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் விசாரணை நீதிமன்றம் மீண்டும் பிணையில் வரமுடியாத பியாணை பிறப்பித்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 18-ந்திகதியில் இருந்து எனது கணவரை காணவில்லை என்று அவரது மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.

2015-ம் ஆண்டு மற்றும் 2017-ல் போராடிய படேல் சமூக மக்கள் மற்றும் தலைவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துவதற்காக கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹர்திக் படேல் மனைவி, எனது கணவரை காணவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து ஹர்திக் படேல் மனைவி கிஞ்சல் கூறுகையில் ‘‘ஜனவரி மாதம் 18-ந்திகதி கைது செய்யப்பட்ட பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்று கூட எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், தொடர்ந்து போலீசார் வீட்டிற்கு வந்து அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்டு வருகின்றனர்’’ என்றார்.