ஏமன் கிளர்ச்சியாளர்களிடையே அமைதி ஒப்பந்தம்!

வெள்ளி நவம்பர் 08, 2019

ஏமன் பிரிவினைவாதிகளுடன் அந்நாட்டு அரசு அமைதி ஒப்பந்தம் ஏற்பட உதவிய சவுதிக்கு ஐ.நா. பாராட்டு தெரிவித்துள்ளது.

ஏமன் அரசுக்கும் அந்நாட்டின் தென் பகுதியில் உள்ள பிரிவினைவாதிகளுக்கும் இடையே சவுதி தலைமையில் அமைதிக்கான ஒப்பந்தம் இந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

ஏமனில் நான்கு ஆண்டுகளாகத் தொடரும் போருக்கு அரசியல் ரீதியாக முக்கியத் தீர்வாக இந்த ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் ஏமனில் புதிய சூழல் உருவாகும். மேலும், சவுதி அரேபியா உங்களுடன் துணை நிற்கும் என்று சவுதி இளவரசர் முகமது சல்மான் தெரிவித்தார்.

இந்நிலையில் ஏமனில் தென் பகுதி பிரிவினைவாதிகளுக்கும் ஏமன் அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்காக சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளது.

ஏமனுக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி மார்ட்டின், சவுதி இளவரசர் சல்மானை சமீபத்தில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு குறித்து மார்ட்டின் கூறும்போது, “ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கும், ஏமன் அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு உதவிய சவுதி இளவரசர் முகமது சல்மானுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்” என்றார்.

மேலும் இந்த ஒப்பந்தம் மூலம் ஏமனில் நடைபெறும் போர் முடிவுக்கு வரும் என்று நம்புவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஏமன் போர்

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும் ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர்.

ஏமனில் நான்கு ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.