எம் மாணவர்களைக் காப்பாற்ற ஆசிரியர்கள் முன்வர வேண்டும்!

புதன் பெப்ரவரி 12, 2020

இறைவனின் அருளாசி பெற்ற நாயன்மார்கள் பாடியருளிய திருமுறைகளைப் பாடவதும் பாராயணம் செய்வதும் நம்மைப்
பக்குவப்படுத்தவல்லதென்பது நம்முன்னோர்களின்முடிவு.

அதிலும் மணிவாசகப் பெருமான் அருளிய  திருவாசகம் மனக்கவலை நீக்கவல்ல மாமருந்து.

எனவே இறையருளாளர்களால் பாடப்பெற்ற திருமுறைகளை ஓதுகின்ற நடைமுறை நம் மாணவர்களிடையே பழக்கப்படுத்த வேண்டும்.

முன்பெல்லாம் கிழமையில் ஒரு நாளேனும் ஆலயத்துக்குச் செல்வது, ஆலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை செய்வது, எல்லோருமாகச் சேர்ந்து திருமுறைகளைப் பாடுவது என்ற நடைமுறை இருந்தது.

ஆனால் இப்போது அதிகாலை எழுந்தால் இரவு ஒன்பது மணிவரை ரியூசன் என்று ஓடித் திரிவதிலேயே பெற்றோர்களதும் மாணவர்களதும் நேரம் கடந்து விடுகிறது.

ஆம், வெள்ளிக்கிழமை தோறும் ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாடாற்றும் பழக்கம் நம்மிடையே வழக்கமாக இருந்தது.

ஆனால் இப்போது நேரம் இல்லை என்ற காரணத்தோடு ஆலய வழிபாடுகள் நின்று போக, மாணவர்களிடையே-இளம்
சந்ததியிடையே மனதை ஆற்றுப்படுத்தும் வழி தெரியாமல் போயிற்று.

நம் முன்னோர்கள் ஆலய வழிபாட்டை வலியுறுத்தியதற்குள் நிறைந்த உளவியல் காரணங்கள் உண்டு.

ஆலயத்துக்கு சென்று வருவது மன ஆறுதலைத் தருவதுடன் புதிய சிந்தனைக்கும் வித்திடுகிறது.

எனினும் சமகாலச் சூழ்நிலைகள் ஆன்ம சுகத்துக்கு இம்மியும் இடம் வழங்காத நிலையில், எதையும் எதிர்கொள்ள முடியாத மனநிலைக்கு மாணவர்களும் இளம் பிள்ளைகளும் ஆளாகின்றனர்.

இதன்காரணமாக ஒவ்வொரு நாளும் தற்கொலை மரணங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

அதிலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதான கொடுமை எம்மிடம் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் சவாலாகும்.

தவிர, மாணவர்கள் தற்கொலை செய்வதான சம்பவங்கள் முன்னுதாரணமாகிவிடுமோ என்று ஏக்கத்தைத் தந்துள்ளது.

எனினும் இதுபற்றி யாரேனும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. எல்லாம் வெறும் சம்பவங்களாக கதைபட்டு காலத்தோடு கடந்து போகிறது.

பாடசாலைகளில் ஆற்றுப்படுத்தலும் வழி காட்டலும் என்றைக்கு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டதோ அன்றைக்கு அந்தப் பணியில் இருந்து ஏனைய ஆசிரியர்கள் விடுதலை பெற்றுக் கொண்டனர்.

ஆலோசனை,வழிகாட்டல்,ஆற்றுப்படுத்தல் என்பனவற்றை ஒட்டுமொத்த ஆசிரியர்களும் செய்ய வேண்டும்.அதனையே எங்கள் ஆசிரியர் சமூகம் செய்து வந்தது.என்றைக்கு கல்வியாளர்கள் உளவியலுக்கும் வழிகாட்டலுக்கும் அறிக்கை தேவையயன்றார்களோ அன்றைக்கு ஆசிரியத் தொழிலின் அடிப்படையே ஆட்டம் கண்டுபோனது.

ஆக, எங்கள் மாணவர்கள் எடுக்கின்ற மிகத் துன்பமான முடிவுகளை தடுப்பதற்கு அனைத்து ஆசிரியர்களும் முன்வர வேண்டும்.இந்தத் தார்மீகப் பணியை செய்வது மிகப் பெரும் புண்ணியமாகும்.
நன்றி-வலம்புரி