சுவாச கவசம் அணிவதால்,உடலுக்கு கிடைக்கும் ஆக்சிஜனின் அளவு குறையாது!!

திங்கள் அக்டோபர் 12, 2020

சுவாச கவசம் அணிவதால், உடலுக்கு கிடைக்கும் ஆக்சிஜனின் அளவு குறையாது என, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள மயாமி மருத்துவ கல்லுாரியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

மூச்சு உள்வாங்கும்போது, அந்தக் காற்றில் உள்ள ஆக்சிஜன் ரத்தத்தில் கலப்பதும்,ரத்தத்தில் உள்ள கரியமில வாயுவை எடுத்து வெளியில் விடுவதும் நடக்கிறது.

இதை மருத்துவர்கள், 'வாயுப் பரிமாற்றம்' என்று அழைக்கின்றனர். இந்த செயல்பாடு, முக கவசம் அணிவதால் எந்த வகையிலும் பாதிப்பதில்லை என, மயாமி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆரோக்கியமாக உள்ள, 15 மருத்துவர்கள், நுரையீரல் செயல்பாடு குறைந்துள்ள, 15 ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஆகியோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஆக்சிஜன் பரிமாற்றம் குறித்து தெரிய வந்தது.

மூக்கு மீது கவசம் அணியும்போது, மூச்சின் கதகதப்பு, தோலின் மீது கவசம் அழுந்துவது போன்ற புதிய உணர்வுகள் சிலருக்கு சங்கடம் தரலாம். ஆனால், அந்த கவசம் தான் அவர்களுக்கு தொற்று ஏற்படாதபடி காக்கிறது என்பதை அவர்கள் மறக்கக் கூடாது என, மயாமி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.