சம்பந்தருக்குப் பின்பான தலைமை யாருக்கு?

வெள்ளி அக்டோபர் 25, 2019

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்து அதனை வழிப்படுத்தியிருந்தால் இன்று தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகச் செயற்பட்டிருக்கும்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதை இலங்கைத் தமிழரசுக் கட்சி இம்மியும் விரும்பவில்லை.

மாறாக, தமிழரசுக் கட்சியை முதன்மைப் படுத்தவும் பலப்படுத்தவும் அந்தக் கட்சியின் தலைவர்கள் முற்பட்டதால் கூட்டமைப்பு உடைந்து போனது.

இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது பெயரளவில் மட்டுமே இயங்குகிறது.

மற்றும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியே கூட்டமைப்பு. கூட்டமைப்பே இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பதாக ஆகிவிட்டது.

இதை நாம் கூறுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள் கூட்டமைப்பை கட்டி ஆள்கிறார் என்று யாரும் நினைத்துவிடாதீர்கள்.

இது ஒரு புறமிருக்க, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அவர்கள் அதட்டியும் சுட்டு விரலால் உறுக்கியும் தனது தலைமைப் பதவியைக் கொண்டு சென்றார்.

கர்மவீரர் காமராஜர்;ஆகட்டும் பார்க்கலாம் என்று கூறுவதைப் போல, சம்பந்தர் அவர்கள் யோசிப்போம். அதுபற்றி ஆராய்வோம். பொறுத்திருக்க வேண்டும் என்ற சொற்பதங்களைப் பயன்படுத்திப் பயன்படுத்தி காலத்தைக் கடத்தி விட்டார்.

காலம் கடத்துவதை அவர் அறியாவிட் டாலும் காலம் அவரின் முதுமையைக் கணக்கிட்டுள்ளது.

இப்போது கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் அவர்கள் முதுமையின் உச்சமான பிடிக்குள் அகப்பட்டுள்ளார்.

கேட்கும் சக்தி குறைந்து விட்டது. பேசுவதும் கடினமாயிற்று என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இன்னொருவரிடம் கொடுத்தாக வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

தனது தலைமைப் பொறுப்பை இன்னொருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று இரா.சம்பந்தர் அவர்களே கூறுவதாகக் கேள்வி.

அப்படியானால் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? என்பதுதான் நம்முன் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி.

இந்தக் கேள்விக்கான பதிலை விரைவில் தேடி எடுப்பதில்தான் கூட்டமைப்பின் எதிர் காலம் தங்கியுள்ளது.

ஆனாலும் கூட்டமைப்பின் தலைவர் இவர் தான் என்று ஒருவரைச் சுட்டிக்காட்டி அவரைத் தலைவராக ஏற்பதற்கு கூட்டமைப்பில் உள்ள எவரும் தயாராக இல்லை என்பதையும் இங்கு கூறித்தானாக வேண்டும்.

சரியோ பிழையோ தனது அதட்டலால் கூட்டமைப்பின் தலைமையை தக்கவைத்துக் கொண்டிருந்த சம்பந்தரின் பணியை இனி யார் செய்ய முடியும் என்ற கேள்விக்கான விடை நீண்ட மெளனமாகவே இருக்கப் போகிறது.

நன்றி-வலம்புரி