சம்பளம் கோரி போராட்டம் மேற்கொண்ட ஊழியர்கள் பணி நீக்கம்!

புதன் அக்டோபர் 09, 2019

மட்டக்களப்பு கல்குடாவிலுள்ள ஆயுள்வேத நிலையத்தில் தொழில் புரிந்து வந்த ஊழியர்கள் தமது கடந்த மாத சம்பளப் பணத்தினை வழங்குமாறு கோரியபோது அதன் நிறைவேற்று பணிப்பாளர் ஊழியர்களை  வேலையிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த ஊழியர்கள் தமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென 2 நாட்களாக தொடர்ந்து பணிப்பஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 கல்குடா பொலிஸ் நிலையத்தில் குறித்த நிலையத்தின் பணிப்பாளருக்கு எதிராக ஊழியர்களினால் தமது நிலை குறித்து முறைப்பாடு ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பதிவு செய்திருந்தனர்.

அது தொடர்பான  விசாரணை இன்று புதன் கிழமை காலை கல்குடா பொலிஸ் நிலையத்தில்  இடம்பெற்றது.

விசாரணையின் போது   ஊழியர்களுக்கான சம்பளம் பணத்தினை வழங்குவதாகத் தெரிவித்து தமது நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு நிறைவேற்றுப் பணிப்பாளரினால் கேட்டுக் கொள்ளப்பட்டது.

 

 

இந்நிலையில், குறித்த நிறுவனத்திற்குச் சென்ற ஊழியர்கள் உள்ளே செல்ல விடாமல் தடுக்கப்பட்டு கதவினை பூட்டி வெளியேற்றப்பட்டனர்.

குறித்த நிலையத்திற்கு முன்பாக  நின்று ஊழியர்கள் மீண்டும்  கவனயீர்ப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

தங்களுக்கு வழங்கப்படுகின்ற மாதாந்த சம்பளப் பணம் ஒழுங்காக வழங்கப்படாமை, பெண்களுக்கான பாதுகாப்பு இன்மை, சம்பளத்தில் அதிகரிப்பு, ஊழியர் சேமலாப நிதி அறவீடு, மற்றும் ஒரு நிர்வாக தலைமைத்துவம் வேண்டும்  போன்ற கோரிக்கைகளை முன்வைத்து  வந்த நிலையில் குறித்த அதிரடி நடவடிக்கை தங்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

 

 

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் சந்திக்க விருப்பம் தெரிவிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.