சிறீலங்காவில் கொரோனா தொற்றில் உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை!

ஞாயிறு மார்ச் 29, 2020

சிறீலங்காவில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது உயிரிழப்பு நேற்றுப் பதிவாகியது.
 
ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 
மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
அவருக்கு முன்னர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை இடம்பெற்றுள்ளதோடு நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் என்பன காணப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
 
அத்துடன் அவர் சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்டுள்ளதோடு சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நான்காவதாக அடையாளம் காணப்பட்டிருந்தார்.
 
இந்த நிலையில் அவரது இறுதி கிரியைகளை இன்றைய தினத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் அதனை மருத்துவமனையின் பிரேத அறையிலேயே முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அவரது உடலை குடும்ப உறுப்பினர்கள் மாத்திரம் பார்வையிட முடியுமெனவும் மருத்துவ பரிசோதகரின் முன்னிலையிலேயே அவரது இறுதி கிரியைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் மருத்துவமனையின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் சடலம் கடும் பாதுகாப்புடன் சர்வதேச சுகாதார அறிவுறுத்தல்களின் கீழ் கொடிகாவத்த மயானத்தில் சற்றுமுன் தகனம் செய்யப்பட்டது.