சீன மொழி திணிப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு!!

ஞாயிறு செப்டம்பர் 06, 2020

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் வரிசையில் ஆசிய பகுதியில் அமைந்த சீனா முதல் இடத்தில் உள்ளது.  அந்நாட்டில் மாண்டரின் என்ற மொழி பரவலாக மக்களால் பேசப்பட்டு வருகிறது.

சீனாவின் வடக்கு பகுதியில் மங்கோலிய பழங்குடி பிரிவினர் வசிக்கும் இன்னர் மங்கோலியா எனப்படும் உட்பகுதியானது சுயாட்சி பகுதியாக செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில், சீனாவின் வடபகுதியில் மாண்டரின் மொழி கல்வியை புகுத்த அந்நாட்டு அரசு முயன்று வருகிறது.

இதற்காக வகுக்கப்பட்ட 3 ஆண்டு திட்டத்தின் கீழ், உள்ளூர் வரலாறு, இலக்கியம் மற்றும் பழங்குடி பாடபுத்தகங்களை நீக்கி விட்டு அவற்றுக்கு பதிலாக மாண்டரின் மொழியை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது.  இது கலாசார அழிப்பு நடவடிக்கை என மங்கோலிய பழங்குடி சிறுபான்மையினர் ஆத்திரமடைந்து உள்ளனர்.

இந்த புதிய கொள்கைக்கு மறுப்பு தெரிவித்து பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து விட்டனர்.  கடந்த வாரம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்னர் மங்கோலியா பகுதியில் தெருக்களில் பேரணியாக சென்று தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

சீன அதிபர் ஜின்பிங்கின் தலைமையில் செயல்படும் சீன கம்யூனிஸ்டு கட்சி, பழங்குடியின சிறுபான்மையினரிடையே மாண்டரின் மொழியை தீவிரமுடன் உட்புகுத்தி, ஒட்டு மொத்தத்தில் சீனர்களின் அடையாளம் வெளிப்படும் வகையில் செயல்பட்டு வருகிறது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.

அவர்களது சிறுபான்மையின மொழியானது அழிந்து வரும் சூழலில் உள்ள நிலையில்,சமீபத்திய சீன அரசின் மாண்டரின் மொழி உத்தரவால் தங்களது மொழி முழுவதும் அழிந்து விடும் என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர்.

இதனை தொடர்ந்து ஜப்பான் நாட்டில் வசித்து வரும் பழங்குடி மங்கோலியர்கள் அந்நாட்டின் டோக்கியோ நகரில் சீன தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்கள் எதிர்ப்பு வாசங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தியபடி,தெருக்களில் வரிசையாக நின்று தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.