செய்திகளும் எழும் கேள்விகளும்...?

வியாழன் அக்டோபர் 17, 2019

செய்தி:- நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்படாவிட்டால் சர்வதேச மட்டத்தில் பாரிய விளைவுகள் ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எழும் கேள்வி:- ‘பாரிய விளைவுகள் யாருக்கும் ஏற்படும்’ என்று சம்பந்தன் யாருக்கும் சொன்னாரா..?
                                                                           *****************
செய்தி:- மீண்டும் சர்வாதிகார ஆட்சி, வெள்ளைவான் கலாசாரம், ஜனநாயக உரிமை மீறல் உள்ளிட்ட கட்டமைப்பினைக் கொண்டு வருவதா? இல்லையா? என்பதை நாட்டு மக்கள் தூர நோக்குடன் சிந்தித்து தீர்மானிக்க வேண்டும் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எழும் கேள்வி:- நீங்கள் ஆட்சிக்கு வந்தால் காவித் தொல்லை, பண்பாட்டு அழிப்பு வருமே அதற்கு என்ன செய்வது..?
                                                                         *****************
செய்தி:- எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து எந்தவொரு தீர்மானமும் இன்னமும் எட்டப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எழும் கேள்வி:- பேரம் இன்னும் படியவில்லையோ..?
                                                                       *****************
செய்தி:- சிறீலங்கா - இந்தியாவிற்கு இடையிலான உறவு அண்மைக்காலமாக மிகவும் நேர்மறையானதும், முன்னேற்றகரமானதுமான மாற்றங்களை அடைந்திருப்பதாக சிறீலங்காவிற்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங்சந்து கூறியிருக்கிறார்.

எழும் கேள்வி:- கோத்தபாய பதவிக்கு வந்தால்..?
                                                                      *****************
செய்தி:- இந்தியாவின் ஒரு பகுதியாக இலங்கை இருந்திருந்தால் நாங்கள் இன்று எதிர்கொண்டு வருகின்ற இன்னல்கள் ஒடுக்குமுறைகள் அடக்குறைகள் இல்லாது இருந்திருப்போம் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிஞானம் தெரிவித்தார்.

எழும் கேள்வி:- நாங்கள் இருந்திருப்போமா..?
                                                                       *****************
செய்தி:- நாங்கள் எங்கள் தேசத்தில் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்றால் அனைவரும் ஒருமித்து முடிவு எடுக்கவேண்டும் அவ்வாறு செய்வதுதான் எமது எதிர்கால சந்ததிக்கு நாம் செய்யும் கடமையாகும் என இலங்கைத் தழிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

எழும் கேள்வி:- நீங்கள் ஒருமித்து வாழ்வதற்காகவா இத்தனை ஆயிரம் மாவீரர்களும், மக்களும் தங்கள் உயிர்களைத்   தியாகம் செய்தார்கள்..?
                                                                        *****************
செய்தி:- ஐ.நா. சபையில் கடுமையான நிதிப் பற்றாக்குறை நிலவுவதால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, அதன் பொதுச்செயலாளர் கட்டரஸ் கவலை தெரிவித்துள்ளார்.

எழும் கேள்வி:- உங்கள் பிரச்சனையையே தீர்க்கமுடியாதபோது, உலகப் பிரச்சினையை எப்படித் தீர்க்கப்போகின்றீர்கள்..?
                                                                     *****************
செய்தி:- சனிக் கோளைச் சுற்றி 20 புதிய நிலவுகள் அமெரிக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எழும் கேள்வி:- இருட்டுக் கோள் என்கின்றார்கள், ஆனால் தினமும் சனிக்கு பெளர்ணமியாக இருக்கும்போல் இருக்கின்றதே..?
                                                                    *****************
செய்தி:- முடியாது என்ற வார்த்தைகளை எமது அகராதில் இருந்து அகற்றிவிடுவோம் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எழும் கேள்வி:- காணாமல்போனவர்களை கண்டுபிடிக்க சஜித்தினால் முடியுமா, முடியாதா..?

                                                                      *****************

-தெய்வமகள்-

நன்றி: ஈழமுரசு