சென்னை துறைமுகத்துக்கு வெளிநாட்டு பயணிகள் கப்பல் வர தடை!

வியாழன் மார்ச் 12, 2020

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சென்னை துறைமுகத்திற்கு வெளிநாட்டு பயணிகள் கப்பல்கள் வருவதற்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சென்னை துறைமுகம் உள்பட நாட்டில் உள்ள 12 துறைமுகங்களுக்கும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்ற வெளிநாட்டு பயணிகள் கப்பல்கள் வருவதற்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் திடீர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. முதல் கட்டமாக சென்னைக்கு வர இருந்த இந்தோனேஷியா நாட்டு கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து சோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகின்றன. இதேபோல் இந்தியாவிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் விமான நிலையம், துறைமுகம் பகுதிகளில் சோதனைக்கு பிறகே வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்தநிலையில் சென்னை துறைமுகத்துக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்ற பயணிகள் கப்பல் வருகைக்கு வரும் 31-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:-

மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் வரும் மார்ச் 31-ந்தேதி வரை வெளிநாட்டு பயணிகள் கப்பலுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று கூறி உள்ளது. ஆனால், கடந்த ஜனவரி 1-ந்தேதிக்கு முன்பே இந்தியாவுக்கு வருவதாக தெரிவித்த பயணிகள் கப்பலை மட்டும் அனுமதிக்கலாம். அதற்கு பிறகு வர அனுமதி கேட்ட எந்த கப்பலுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று அதில் கூறி உள்ளது.

மாறாக சரக்கு கப்பல்களை வழக்கம் போல் அனுமதிக்கலாம். அதில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவது தீவிரமடைந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் இம்மாதம் இந்தோனேஷியாவில் இருந்து 580 பயணிகளுடன் சென்னை துறைமுகத்துக்கு வருவதாக அனுமதி கேட்ட பயணிகள் கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் இருந்து 10 ஆயிரம் டன் இரும்பு பொருட்களை ஏற்றிய ‘மேக்னட்’ என்ற சரக்கு கப்பல் சென்னை துறைமுகத்துக்கு கடந்த மாதம் 18-ந்தேதி வந்தது. அதில் வந்த 19 ஊழியர்களில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது தெரியவந்தது.

உடனடியாக இருவரும் அந்தகப்பலிலேயே தனி அறையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

இதுகுறித்து மத்திய கப்பல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவியுள்ள வெளிநாடுகளில் இருந்து இந்திய துறைமுகங்களுக்கு வரும் பயணிகள் கப்பலில் வரும் பயணிகள், ஊழியர்கள் மற்றும் குழுவினரை அனுமதிக்க வேண்டாம் என நாட்டில் உள்ள 12 துறைமுகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 1-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.

சரக்கு கப்பல்களில் வரும் நபர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் அவர்களை நாட்டில் உள்ள 200 துறைமுகங்களுக்குள் அனுமதிக்காமல், அவர்களை கப்பலிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அரசு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் பாதித்த வெளிநாடுகளில் இருந்து எந்தவொரு கப்பலும் நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களுக்கும் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.