ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை குற்றவாளிகளாக்குவதை நிறுத்துங்கள்

வெள்ளி அக்டோபர் 16, 2020

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை குற்றவாளிகளைப் போல நடத்துவதை நிறுத்துமாறு சுதந்திர வர்த்தக வலயத்தின் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.


ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லப்பட்ட விதம் குறித்து பல மனித உரிமை அமைப்புகள் கரிசனை வெளியிட்டுள்ளன.

ஊடகங்கள் அவர்களை குற்றவாளிகளாக சித்திரித்துள்ளன,அவர்கள் குற்றவாளிகள் போல நடத்தப்படுகின்றனர் என டபிந்து கலக்டிவ் என்ற அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சமிலா துசாரி தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் விடுதிகளுக்கு சென்று சோதனையிடுவதுடன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு செல்வதற்கு ஐந்து பத்து நிமிடங்களில் தயாராக வேண்டும் என உத்தரவிடுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அந்த இடத்தில் சுகாதார பரிசோதகர்கள் எவர்களையும் காண முடிவதில்லை. தாம் எங்கு கொண்டுசெல்லப்படுகின்றோம் என்பது தெரியாத நிலையில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் கொண்டு செல்லப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் இல்லாத நிலையில் அவர்களை அவர்களது குழந்தைகளுடன் அழைத்துச் செல்கின்றனர் அவர்களை ஒரு பேருந்திலிருந்து இன்னொரு பேருந்திற்கு மாற்றுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் தொற்றுக்குள்ளாகும் ஆபத்து மிக அதிகம் எனவும் டபிந்து கலக்டிவ் என்ற அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சமிலா துசாரி தெரிவித்துள்ளார்.


ஏன் அவர்களை இரண்டாம்தர பிரஜைகள் போல நடத்துகின்றனர் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறிய அறைகளில் இரண்டு அல்லது மூன்று பேர் வாழ்கின்றனர் சுமார் 100 முதல்150 பேர் ஒரே கழிவறைகளையே பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தின் உயர்மட்டத்தினர் விசேட சிறந்த ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படும் அதேவேளை இவர்கள் மிக மோசமான நிலைமைகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர் என தெரிவித்துள்ள சமிலா துசாரி, நிறுவனங்கள் செப்டம்பர் முதல் அவர்களிடமிருந்து வேலைகளைப் பெற்ற போதிலும் அவர்களுக்கு விடுப்பினை வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


நோய் பரவுவதற்கான காரணம், இந்தியாவில் காணப்படும் நிலைமை, இந்த விவகாரம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பது போன்ற முக்கியமான விடயங்கள் குறித்து நாங்கள் ஆராயவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வெளிநாட்டு வருமானத்தைக் கொண்டுவரும் மிகப்பெரிய தொழில்துறையின் உயிர்நாடிகள் இந்த தொழிலாளர்கள் என்பதால் அவர்களை புறக்கணிக்கக்கூடாது என டபிந்து கலக்டிவ் என்ற அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சமிலா துசாரி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஊடகங்களும்அரசாங்கமும் அவர்களை குற்றவாளிகளாக சித்திரிப்பதை நிறுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை இந்த நிலைமைக்கு இலங்கை முதலீட்டு சபை, ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தொழில் திணைக்களம் ஆகியவற்றையே குற்றம் சாட்டவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.