370-வது சட்டப்பிரிவு பயங்கரவாதிகளுக்கு கேடயமாக இருந்ததாம்!

சனி ஓகஸ்ட் 17, 2019

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-வது சட்டப்பிரிவு பயங்கரவாதிகளுக்கு கேடயமாகவும் காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கு ஒரு பாலமாகவும் இருந்தது என மத்திய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று 17-வது மாநில சட்ட சேவைகள் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு தான் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசு நாட்டின் பாதுகாப்பிலும், ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்கள் முன்னேற வேண்டும் என்பதே எங்கள் முக்கிய நோக்கம்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த  370-வது சட்டப்பிரிவு பயங்கரவாதிகளுக்கு கேடயமாகவும், காஷ்மீருக்குள்  ஊடுருவுவதற்கு ஒரு பாலமாகவும் இருந்து வந்தது.

ஊழல் தடுப்புச் சட்டம், குழந்தை திருமணத் தடைச் சட்டம் ஆகியவை அங்கு பொருந்தாது. இது எப்படிப்பட்ட காஷ்மீர்? 

எனவே நாட்டு மக்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் வாழும் மக்களின் நலனுக்காகவே 370வது சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.