ஹிட்லரின் சுயசரிதை - அமோக விற்பனை

January 24, 2016

ஹிட்லரின் சுயசரிதையான “மெயின் காம்ப்’ (எனது போராட்டம்) இரண்டாம் உலகப் போருக்குப் பின் முதல்முறையாக பிரசுரமாகி, பரபரப்பாக விற்பனையாகி வருகிறது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: 1923-ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு சிறையில் இருந்தபோது, ஹிட்லர் எழுதிய சுயசரிதை “மெயின் காம்ப்’.

யூதர்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் எதிரான தனது தேசிய இனவாதக் கொள்கையை அந்த நூலில் ஹிட்லர் வெளிப்படுத்தியிருந்தார். இனவெறி நாஜிக்களின் வேதமாகத் திகழ்ந்த அந்த நூல், இரண்டாம் உலகப் போரில் அவர்களது தோல்விக்குப் பின் ஜெர்மனியில் தடை செய்யப்பட்டது. போரின் முடிவில் ஹிட்லர் மரணமடைந்த பிறகு, அந்த சுயசரிதையின் பதிப்புரிமையை பவேரியா மாகாணம் பெற்றது.

இந்த நிலையில், நூலாசிரியரான ஹிட்லர் இறந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததால் அந்த பதிப்புரிமை காலாவதியானது. எனினும் “மெயின் காம்ப்’புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க பவேரிய அரசு மறுத்துவிட்டது.

இதையடுத்து, மியூனிக் தற்கால வரலாற்றுக் கழகம் அந்த நூலை அச்சிட்டு, கடந்த வாரம் வெளியிட்டது. ஹிட்லரின் கருத்துகளுக்கு இடையிடையே குறிப்புகளும், விமர்சனங்களும் இணைத்து பிரசுரமாகியுள்ள அந்த நூல் பரபரப்பாக விற்பனையாகி வருகிறது.

4,000 பிரதிகள் அச்சாகியுள்ள நிலையில், 15,000 பிரதிகளுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. பெர்லின் நகரின் முக்கிய புத்தகக் கடையில், கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பிரதி உட்பட அனைத்துப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன.

தான் வாங்கிய “மெயின் காம்ப்’ பிரதியை 10,000 யூரோக்களுக்கு (சுமார் ரூ.7 லட்சம்) விற்பனை செய்வதாக இணையதளத்தில் ஒருவர் அறிவித்துள்ளார். இந்நிலையில், ஹிட்லரின் சுயசரிதைப் புத்தகம் வெளியாகியுள்ளதற்கு யூதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பிரிட்டனைச் சேர்ந்த ஒரு வரலாற்று நிபுணர் கூறுகையில், “”ஹிட்லரின் சுயசரிதையை பிரசுரிப்பது, இன வெறியுடன் எழுதியுள்ள கண்மூடித்தனமான கருத்துகளுக்கு இலக்கிய முலாம் பூசியது போலாகிவிடும்” என்றார்.

எனினும், அந்தப் புத்தகத்தைப் பிரசுரித்துள்ள மியூனிக் தற்கால வரலாற்றுக் கழக இயக்குநர் ஆண்ட்ரியாஸ் விர்ஷிங் கூறியதாவது: வெளிநாட்டவர் மீதான வெறுப்பு ஐரோப்பாவில் அதிகரித்து வரும் இந்தச் சூழலில், தேசியப் பேரினவாதத்தின் சுயரூபத்தை வெளிப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ள ஹிட்லர் சுயசரிதையின் ஆய்வுப் பதிப்பு அவசியமான ஒன்றே.

மக்களில் மனங்களில் வெறுப்பை விதைப்பதற்காக ஹிட்லர் கூறிய பொய்களும், திரித்துக் கூறிய உண்மைகளும் எங்களது பதிப்பில் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளன என்றார் அவர். 1,948 பக்கங்களைக் கொண்ட இரு புத்தகங்களாக ஹிட்லரின் சுயசரிதை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஹிட்லரின் கருத்துகளுக்கு இடையே 3,500 இடங்களில் விமர்சனக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

பலதும் பத்து