விரிவான விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

July 23, 2017

நீதிபதி மா.இளஞ்செழியனின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டித்துள்ளார்.

விசேட பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, இந்த துப்பாப்பிப் பிரயோகத்தில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ். நல்லூர் பின்வீதி நாற்சந்தியில் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து நேற்று (23) மாலை 5.10 அளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பயணித்த வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் பயணித்த மோட்டார் சைக்கிளில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியை பறித்தெடுத்த ஒருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்ததுடன், அவர்களில் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்தார்.

15 ஆண்டுகளாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய் பாதுகாவலராக பணியாற்றிவந்த சரத் பிறேமசந்திர என்ற 51 வயதான பொலிஸ் சார்ஜனே உயிரிழந்தவராவார்.

சிலாபம் – குமாரகட்டுவ பகுதியைச் சேர்ந்த இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

1986 ஆம் ஆண்டு இவர் பொலிஸ் சேவையில் இணைந்துள்ளார்.

இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜனின் பூதவுடலை பொறுப்பேற்பதற்காக அவரது உறவினர்கள் இன்று முற்பகல் யாழ். போதனா வைத்தியசாலைக்கு வருகைத் தந்தனர்.

பூதவுடலைப் பொறுப்பேற்க வந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினர்களிடம் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கதறி அழுதார்.

இதேவேளை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற, பொலிஸ் கான்ஸ்டபிளையும் சந்தித்து நீதிபதி இளஞ்செழியன் நலன் விசாரித்துள்ளார்.

இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பூதவுடல் அஞ்சலிக்காக, இன்று (23) பிற்பகல் யாழ். பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (23) பிற்பகல் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இதன்போது, சம்பவம் தொடர்பான முழுமையான விபரங்களை கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி, சம்பவம் குறித்து பூரண விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மாஅதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை, நீதிபதி மா.இளஞ்செழியனின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டித்துள்ளார்.

துணிச்சலான பொலிஸ் அதிகாரியின் தியாகம், மறக்க முடியாதது எனவும் ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த சார்ஜனின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜனாதிபதி காயமடைந்த கான்ஸ்டபிள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று மாலை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நல்லூரில் நேற்று (22) மாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்தினருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுதாபம் வெளியிட்டுள்ளார்.

தமது ட்விட்டர் தளத்தில் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.

இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து சட்டத்தின் முன்கொண்டு வரவேண்டும் எனவும், இதன் பின்னணியில் இருக்கக்கூடிய சதித்திட்டங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் பொலிஸ் மாஅதிபரை கேட்டுக்கொள்வதாகவும் கூட்டமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சம்பவத்திற்கு வட மாகாண சபையும் தனது கடுமையான கண்டணத்தை வௌியிட்டுள்ளது.

நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த கொலை முயற்சியானது, நாட்டினதும் யாழ். மாவட்டத்தின் நீதித்துறை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக பார்க்கப்பட வேண்டும் என வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், எமது பிரதேசத்தில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதில் மிக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் நீதிபதி ஒருவரை கொலை செய்து ஏனைய நீத்துறை சார்ந்தவர்களையும் அச்சுறுத்தி, அராஜகத்தை இந்த மண்ணிலே நிலை நிறுத்துவதே இந்த கொலை முயற்சியின் நோக்கமாக இருக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ். நல்லூரில் இடம்பெற்ற திட்டமிடப்பட்ட இந்த சம்பவமானது நீதித்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் கொழும்பில் இன்று இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

எவ்வாறாயினும் இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மாறுபட்ட கருத்தொன்றை வெளியிட்டுள்ளனர்.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்காகக் கொண்டு குறித்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்படவில்லை என கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மதுபோதையில் இருந்த மூவர் தனிப்பட்ட தகராறு காரணமாக, குறித்த பகுதியில் முச்சக்கரவண்டி நிறுத்தும் இடத்தில் இருந்த சிலருடன் பிரச்சினையை தோற்றுவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், மேல் நீதிமன்ற நீதிபதி பயணித்த வாகனத்தின் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் அதிலிருந்து இறங்கி, நீதிபதிக்கு பயணிக்க இடமளித்துள்ளதாக ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் மதுபோதையில் இருந்து மூவரில் ஒருவர் பொலிஸ் கான்ஸ்டபளின் துப்பாக்கியைப் பறித்தெடுத்து, அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி குறித்த பகுதியில் இருந்த போதிலும், துப்பாக்கி ரவை தாங்கி அங்கிருக்கவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

 

ஈழத்தீவு