விமானத்தில் ரூ.2 கோடியை விட்டுச்சென்ற பயணி: ஊழியரின் நேர்மைக்கு குவியும் பாராட்டு

March 09, 2017

ஜேர்மனி நாட்டில் ரூ.2 கோடி பணத்திற்குரிய காசோலைகளை பயணி ஒருவர் கவனக்குறைவாக விட்டுச்சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள Nuremberg நகரை சேர்ந்த தம்பதி இருவர் கடந்த திங்கள் கிழமை அன்று அமெரிக்காவில் இருந்து ஜேர்மனிக்கு திரும்பியுள்ளனர்.

கணவரின் தாயாருடைய சொத்துக்களை சமீபத்தில் அவர் பெற்றதை தொடர்ந்து அந்த தொகைக்கான காசோலைகளையும் அவர் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார்.

விமானத்தில் இருக்கையில் அமர்ந்தவுடன் உடமைகளை வைக்கும் பெட்டியில் தன்னுடைய கைப்பையை வைத்துள்ளார்.

பின்னர், விமானம் ஜேர்மனியில் உள்ள முனிச் நகரை அடைந்ததும் அவரும் அவருடைய மனைவியும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், பயணிகள் புறப்பட்டதும் விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் பெண் ஊழியர் ஒருவர் ஈடுப்பட்டுள்ளார்.

அப்போது, பயணி விட்டுச்சென்ற கைப்பையை பார்த்து அதனை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

பின்னர், அந்த கைப்பை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கைப்பையை சோதனை செய்தபோது அதில் 1,66,000 டொலர்(2,51,70,580 இலங்கை ரூபாய்) மதிப்பிலான 3 காசோலைகள் இருந்ததை கண்டு பொலிசார் வியப்படைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பயணியின் முகவரியை கண்டுபிடித்த பொலிசார் அவருக்கு தகவலை அளித்துள்ளனர்.

அப்போது தான் கைப்பையையும், காசோலைகளையும் விமானத்தில் தவறுதலாக விட்டுச்சென்றதை அவர் அறிந்துள்ளார்.

உடனடியாக விமான நிலையத்திற்கு திரும்பிய 69 வயதான அந்த பயணி காசோலைகளை பெற்றுக்கொண்டார்.

கைப்பையை பத்திரமாக ஒப்படைத்த விமான ஊழியரை பொலிசாரும் அதிகாரிகளும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

ஐரோப்பா