வரிப்பணத்தில் பயணம் செய்த பெண் அமைச்சரின் பதவி பறிப்பு

January 09, 2017

அவுஸ்ரேலியா நாட்டில் மக்களின் வரிப்பணத்தில் விமானப்பயணம் மேற்கொண்ட பெண் அமைச்சர் ஒருவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்ரேலியா நாட்டின் பிரதமரான மால்கம் டர்ன்புல்லின் தலைமையிலான அமைச்சரவையில் சூசன் லே என்ற பெண் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் குயின்ஸ்லேண்ட் பகுதியில் சுமார் 473,300 பவுண்ட்(8,69,20,369 இலங்கை ரூபாய்) மதிப்பில் சொகுசு வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

இதற்காக அமைச்சர் மூன்று முறை விமானப்பயணத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

ஆனால், இந்த பயணத்திற்கான செலவுகளை மக்களின் வரிப்பணத்தை அவர் பயன்படுத்தியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

இச்சூழலில் அமைச்சர் தனது பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து சூசன் லே பேசியபோது, ‘சட்டத்திட்டங்களை முறையாக பின்பற்றி தான் செலவுகளை மேற்கொண்டேன். கூடிய விரைவில் நான் மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தவில்லை என்பது நிரூபனம் ஆகும்’ எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் பதவி விலகலை தொடர்ந்து பிரதமரான மால்கம் தனது அமைச்சரவைக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அதில், ‘அமைச்சர்கள் அனைவரின் நடவடிக்கைகளும் சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

குறிப்பாக, மக்களின் வரிப்பணத்தை செலவு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

சூசன் லே தற்காலிகமாக பதவி விலகியதை ஏற்காத எதிர்க்கட்சிகள் அவர் நிரந்தரமாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பிரதமர் அந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா