வட மாகாணத்தின் 14 கோடியை போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை!

July 22, 2017

வட மாகாண பிரதம செயலாளரின் கீழுள்ள 14 கோடி ரூபா நிதியை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டார்.

வட மாகாண பிரதம செயலாளரின் கீழ் 14 கோடி 40 இலட்சம் ரூபா உள்ளமை நேற்றைய மாகாண சபை அமர்வின்போது தெரியவந்தது.

உணவு விவசாய ஸ்தாபனத்தினால் (FAO) வழங்கப்பட்ட 14 கோடி 40 இலட்சம் ரூபா நிதி வட மாகாண சபை ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னதாக அப்போதைய வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் கீழ் இருந்ததாக வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன்  தெரிவித்தார்.

இந்த நிதி 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வட மாகாண பிரதம செயலாளரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இந்த நிதி செலவீனத்திற்குரிய திட்ட முன்வரைபினை சமர்ப்பிக்குமாறு வட மாகாண சபையிடம் கோரியிருந்த போதிலும், அது கிடைக்கவில்லை என வட மாகாண பிரதம செயலாளர் தெரிவித்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நலனுக்கு இந்த நிதியினை வழங்க முன்னுரிமை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

வட மாகாண முன்னாள் விவசாய அமைச்சிற்குட்பட்ட விவசாயத் திணைக்களம், கூட்டுறவுத் திணைக்களம், சமூக சேவைத்திணைக்களம் ஆகியவற்றிற்கு இந்த நிதி உணவு விவசாய ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

வடமாகாண விவசாய அமைச்சராக இருந்த பொன்னுத்துரை ஐங்கரநேசன் தம் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, பதவியை இராஜிமானா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்புக்கு அமைய விவசாய அமைச்சராக முதலமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டார்.

விவசாய அமைச்சின் கீழிருந்த மூன்று திணைக்களங்களில் ஒன்றான விவசாய திணைக்களம் மாத்திரம் தற்போது முதலமைச்சர் வசமுள்ளது.

ஏனைய இரு திணைக்களங்களான சமூக சேவைகள் மற்றும் கூட்டுறவுத்திணைக்களம் ஆகியன வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனின் அமைச்சின் கீழுள்ளது.

வட மாகாண பிரதம செயலாளரின் கீழ் உள்ள 14 கோடியே 40 இலட்சம் ரூபா நிதிக்கான திட்ட முன்வரைபினை சமர்ப்பிக்கும் பொறுப்பு தற்போது இரு அமைச்சுக்கள் வசமுள்ளது.

அதற்கமைய, விவசாய திணைக்களத்தினால் 67.5 மில்லியன் ரூபா முன் திட்ட வரைபு நேற்று முன்தினம் பிரதம செயலாளர் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் தெரிவித்தார்.

ஈழத்தீவு