வட்டுக்கோட்டையா? தமிழீழமா? - கலாநிதி சேரமான்

January 24, 2016

தமிழீழத்திற்கான கடவுச்சீட்டு, அடையாள அட்டை, சுதந்திர சாசனம், நாணயம், யாப்பு என்று அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் தமிழீழத்தின் கனவுலகப் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன், ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை வலுவூட்டியும், அத்தீர்மானத்தினை அரசியல் ரீதியாக முழுவீச்சுடன் அடுத்த கட்டத்திற்கு இவ்வாண்டு எடுத்துச் செல்வதற்கும், கூட்டாக இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதாக’ அறிவித்து உலகத் தமிழர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

இதனால் சிங்கள அரசு அச்சமடைந்திருப்பதாகவும், பெரும் குழப்பத்தில் தடுமாறுவதாகவும் நாளை உருத்திரகுமாரனின் கனவுலக அமைச்சர்கள் ஊடகங்களில் தரிசனமளித்து அசரீரிகளை வெளியிட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. அப்படித்தான் அடுக்கடுக்காக நிகழும் உருத்திரகுமாரனின் கோமாளித்தனங்கள் எம்மை எண்ண வைக்கின்றன.

கானல்நீரில் காகிதக் கப்பலோட்டிக் கனவுலகில் தமிழீழத்தின் சக்கரவர்த்தியாக விளங்கும் உருத்திரகுமாரனின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அரசியல் ரீதியில் அகாலமரணமெய்திய கும்பலுடன் இணைந்து அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையும், அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்து செயற்படப் போவதாகவும் கூறப்படுகிறது. தமிழீழத் தேசியத் தலைவருக்கு மாற்றீடாகத் தன்னை முன்னிறுத்த முற்பட்டுத் தோற்றுப் போன உருத்திரகுமாரனுடன் இணைந்து செயற்பட விரும்புவதன் சூட்சுமத்தை இவர்கள்தான் விளக்க வேண்டும்.

ஆனாலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் செயற்படப் போவதாக உருத்திரகுமாரன் அறிவித்திருப்பது வேடிக்கையானதுதான். ஏனென்றால் 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தமிழீழத் தனியரசுக்கான தீர்மானத்தின் மீதான பொதுவாக்கெடுப்பு 2010ஆம் ஆண்டு புலம்பெயர் தேசங்களில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொழுது அதனை ‘கொட்டைப்பாக்குத் தீர்மானம்’ மீதான வாக்கெடுப்பு என்று எள்ளிநகையாடியவர் உருத்திரகுமாரன். அடிப்படிப்பட்டவருக்கு திடீரென வட்டுக்கோட்டை தீர்மானம் மீது ஏன் அன்பும், அக்கறையும் ஏற்பட்டது?

இங்கு ஒரு விடயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வட்டுக்கோட்டையில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் தலைமையில் தமிழீழத் தனியரசுக்கான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே தமிழீழத் தனியரசே தமிழர்களுக்கான இறுதித் தீர்வாக அமையும் என்ற இலட்சியத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உருவாக்கியிருந்தார்.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற தாரக மந்திரத்துடன் 1972ஆம் ஆண்டின் இறுதியில் தமிழீழ தேசியத் தலைவரின் தலைமையில் தோற்றம் பெற்ற புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 05.05.1976 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளாகப் பெயர் மாற்றம் பெற்றது. அதுவரை ஐக்கிய தமிழர் கூட்டணி என்ற பெயரில் இயங்கி வந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் தலைமையிலான கட்சி, உடனடியாக விழித்துக் கொண்டு ‘ஐக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி’யாகப் பெயர்மாற்றம் பெற்று 14.05.1976 அன்று வட்டுக்கோட்டை பண்ணாகத்தில் தமிழீழத் தனியரசுக்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படும் பொழுது தனது அந்திம காலத்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் எட்டியிருந்தார். தமிழீழத் தனியரசுக்கான தீர்மானத்தை நிறைவேற்றும் பொழுது கூட தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கை செல்வநாயகம் அவர்களுக்கு இருக்கவில்லை. ‘கடவுள் தான் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று வெறுமனவே வார்த்தைகளை உதிர்த்துவிட்டு மண்ணுலகில் இருந்து அவர் மறைந்தார்.

அன்று தமிழீழ தாயகம் தோறும் தனியரசுக்கான உணர்வலை வீசிக் கொண்டிருந்தது. அந்த உணர்வலையை வலைவீசிப் பிடித்து அதன் மூலம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றுபெறுவது மட்டுமே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நோக்கமாக இருந்ததே தவிர தமிழீழத்தை அமைக்கும் எண்ணமோ, மூலோபாயமோ அன்று அவர்களிடம் இருக்கவில்லை. விளைவு: 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராகியதோடு அமிர்தலிங்கம் ஓய்ந்து போனார்.

அன்று எள்ளிநகையாடி இன்று உருத்திரகுமாரன் தூக்கிபிடிக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் கூட பல குறைபாடுகளைக் கொண்டிருந்தது வேறு கதை. முதலாவதாக தமிழீழத்தின் குடிமக்களாகும் உரிமை  ஈழத்தீவில் அல்லது உலகின் ஏனைய இடங்களில் வாழும் ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களுக்கு மட்டுமே உண்டு என்று இத்தீர்மானம் குறிப்பிட்டிருந்தது. இதன் மூலம் ஈழத்தீவில் வசிக்காத தமிழகத்தைச் சேர்ந்த எவருக்கும் தமிழீழக் குடியுரிமை கிடையாது என அறிவிக்கப்பட்டது. இரண்டாவது பெண்களின் உரிமைகள் பற்றி இத்தீர்மானத்தில் மூச்சுக்கூட விடப்படவில்லை. மூன்றாவது தமிழீழத்தில் முஸ்லிம்களின் பங்கு பற்றிய தெளிவான அறிவிப்புக்கள் எவையும் இத்தீர்மானத்தில் இருக்கவில்லை. நான்காவது தென்னிலங்கையில் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே தமிழீழத்திலும் சிங்களவர்களின் உரிமைகள் பேணப்படும் என்று இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது அன்றும், இன்றும் உலகில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை இத்தீர்மானம் உறுதி செய்யவில்லை. ஐந்தாவது தமிழீழத்தில் வாழும் தமிழர்களின் சொத்துரிமை கட்டுப்படுத்தப்பட்டு, பெருந்தொழில்துறைகள் அனைத்தும் அரச மயப்படுத்தப்படும் என்று இத்தீர்மானம் குறிப்பிட்டிருந்தது. அதாவது அன்று சீனாவிலும், ருசியாவிலும் நிலவிய கம்யூனிச அரசு போன்ற ஆனால் சோசலிசம் என்ற பெயரிலான அரசே தமிழீழத்தில் அமைக்கப்படும் என்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

ஆக இறைமையுள்ள தமிழீழத் தனியரசை உருவாக்குதல், சாதியத்தை இல்லாதொழித்தல் போன்றவற்றைத் தவிர வேறு எந்த விதமான ஆக்கபூர்வமான அம்சங்களையும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்க
ளால் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் கொண்டிருக்கவில்லை. ஆனால் இக்குறைபாடுகளை பிற்காலத்தில் ‘சோசலிசத் தமிழீழம்’ என்ற தமது அரசியல் வேலைத் திட்ட ஆவணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிவர்த்தி செய்து கொண்டார்கள்.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட ஈழ சுதந்திர சாசனம், 1985ஆம் ஆண்டு ‘சோசலிசத் தமிழீழம்’ என்ற ஆவணமாகப் பரிணமித்து, தமிழீழம் என்பது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவருக்குமான தாயகம் என்பதை உறுதி செய்தது. அத்தோடு சோசலிச ஆட்சி என்பது பொருளதாரத்தை சீனா, ருசியா போன்று கம்யூனிசப் பாதையில் இட்டுச் செல்வதல்ல என்றும், மக்களின் பொருண்மிய அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவான  திறந்தவெளிப் பொருண்மியப் புறச்சூழலைத் தோற்றுவிப்பதும், சாதி, சமய, பெண்ணடிமைத்துவ, வர்க்க முரண்பாடுகளை நீக்குவதுமே சோசலிசம் எனப் பொருள்படும் என்றும் புதுமையான சிந்தனையை வெளிப்படுத்தியது.

அத்தோடு தமிழீழத்தில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களினதும், சிங்கள மக்களினதும் உரிமையையும் அவ் ஆவணம் உறுதி செய்தது. இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே முதலில் யாழ்ப்பாணத்தையும், பின்னர் கிளிநொச்சியையும் நிர்வாகத் தலைநகராகக் கொண்டு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் 1990ஆம் ஆண்டில் இருந்து 2009 மே 18 வரை தமிழீழ நடைமுறை அரசு நிர்வகிக்கப்பட்டது.

இந்த வகையில் இருபது ஆண்டுகள் தமிழீழத் தேசியத் தலைவரின் தலைமையில் நிர்வகிக்கப்பட்ட தமிழீழ நடைமுறை அரசுக்கு அடிப்படையாகத் திகழ்வது வட்டுக்கோட்டைத் தீர்மானம் அல்ல. மாறாக 1972ஆம் ஆண்டு புதிய தமிழ்ப் புலிகள் இயக்கமாக முகிழ்த்து, வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முன்னரே தமிழீழ விடுதலைப் புலிகளாகப் பரிணமித்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் அரசியல் வேலைத் திட்டத்தைப் பறைசாற்றிய ‘சோசலிசத் தமிழீழம்’ என்ற ஆவணமுமே தமிழீழ நடைமுறை அரசுக்கு அடிப்படையாக அமைந்தன.

ஆனால் இந்த மெய்யுண்மை இன்று மறைக்கப்படுகின்றது. ஏதோ வட்டுக்கோட்டைத் தீர்மானம் தான் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆணி வேர் போன்ற பிரம்மை தோற்றுவிக்கப்படுகின்றது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றிப் பேசுபவர்கள் அதற்கு முன்னரே தோற்றம் பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றிப் பேசுவதில்லை. ஏதோ அதுவொரு தீண்டத்தகாத ஒன்று போல் ஒதுக்கி வைக்கப்படுகின்றது. அதுபோல் மனிதர்களின் கற்பனையில் உருவாகிய கடவுளிடம் தமிழீழத்தைக் கையளித்து விட்டு மடிந்து போன எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமிழீழத் தனியரசுப் போராட்டத்தின் தந்தையாக முன்னிறுத்தப்படுகின்றார்.

தமிழீழ தேசிய விடுதலைக்காகப் பதினான்காவது வயது முதல் போராடிய தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களும், அவரது வழிநின்று களமாடி வீழ்ந்த ஆயிரமாயிரம் மாவீரர்களும் மிகவும் நுட்பமான முறையில் மறைக்கப்படுகின்றார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள் எவரும் அதிலுள்ள குறைபாடுகளைப் பற்றிப் பேசுவதில்லை. அக் குறைபாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘சோசலிசத் தமிழீழம்’ என்ற ஆவணத்தில் நிவர்த்தி செய்யப்பட்டதும் திட்டமிட்ட வகையில் மறைக்கப்படுகின்றது.

இவ்வாறான நிகழ்ச்சித் திட்டத்துடன் உருத்திரகுமாரன் செயற்படுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். இந்திய உளவு அமைப்பான ஐ.பி. நிறுவனத்தின் முகவராக, எம்.கே.நாரயணனின் உற்ற நண்பராக, சிங்களத்தின் கைப்பாவையான கே.பியின் வாரிசாக விளங்கும் உருத்திரகுமாரன் இப்படித்தான் செயற்படுவார். ஆனால் தமிழீழத்தின் கனவுலகப் பிரதமருடன் இணைந்து செயற்படப் போவதாக அறிவித்திருக்கும் ஏனைய இரண்டு அமைப்புக்களுக்கும் என்ன நடந்தது?

சரி. இங்கு இன்னுமொரு கேள்வி எழுகின்றது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் செயற்படுவதுதான் அகாலமரணமெய்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கும்பலினதும், ஏனைய இரண்டு அமைப்புக்களின் நோக்கம் என்றால், அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய அம்சங்களையும் இவர்கள் ஆரத் தழுவிக் கொள்கின்றார்களா?

உதாரணமாக வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பது போன்று மலரப் போகும் தமிழீழத்தில் தனிநபர்கள் சொத்துச் சேகரிப்பதைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றி, அன்றைய சீனா, ருசியா போன்ற கம்யூனிச ஆட்சியை உருவாக்க இவர்கள் விரும்புகின்றார்களா? கம்யூனிசத்தை ருசியா கைவிட்டு இரண்டரை தசாப்தங்கள் கடந்து விட்டன. பெயரளவில் கம்யூனிசத்தை சீனா தூக்கிப் பிடித்தாலும் நடைமுறையில் முதலாளித்துவப் பாதையிலேயே அது நகர்கின்றது. இதுதான் இன்றைய உலக நடைமுறை. இன்று மார்க்சியம் பேசும் தமிழர்கள் கூட தமது பணப் பைகளை நிரப்புவதிலேயே குறியாக இருக்கின்றார்கள். யதார்த்தம் இவ்விதம் இருக்கும் பொழுது இன்றைய உலக ஒழுங்கிற்கு ஒவ்வாத கம்யூனிசம் பேசி உருத்திரகுமாரனும், அவருக்குப் பரிவட்டம் கட்டுவோரும் என்னதான் செய்யப் போகின்றார்கள்?

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு அதியுன்னதமானது. நவநாகரீக உலகின் கவர்ச்சிகளையும், சுகங்களையும் புறந்தள்ளிவிட்டுத் தமது இளமைக் காலத்தைக் கந்தகக் காற்றில் கலக்க விட்டவர்கள் எமது தமிழீழத்தின் புரட்சிப் பெண்கள். பெண்களின் உரிமை பற்றிப் பேசாத வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தூக்கிப்பிடிப்பதன் மூலம் இப்பெண் மாவீரர்களின் ஈகங்களை இவர்கள் மறுதலிக்கப் போகிறார்களா?

தமிழீழ தேச விடுதலைக்காக எத்தனையோ தமிழக உறவுகள் வீரவேங்கைகளாகவும், கரும்புலிகளாகவும் களமாடி மடிந்திருக்கிறார்கள். எத்தனையோ பேர் தீக்குளித்துத் தம்மை ஆகுதியாக்கியிருக்கின்றார்கள். தமிழீழம் என்பது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்தத் தமிழர்களுக்குமான தேசம் என்ற அடிப்படையிலேயே இத்தனை தமிழக உறவுகளும் தமது இன்னுயிர்களை ஈகம் செய்திருக்கின்றார்கள். யதார்த்தம் இவ்விதம் இருக்கும் பொழுது தமிழீழத்தில் உலகத் தமிழர்களின் குடியுரிமையை மறுதலிக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தூக்கிப் பிடிப்பதன் மூலம் உருத்திரகுமாரனும், அவருக்குப் பரிவட்டம் கட்டுவோரும் என்ன செய்யலாம் என எண்ணுகின்றார்கள்?

இனவாத அடிப்படையிலேயே தமிழீழத்தை உருவாக்குவதற்குத் தமிழர்கள் முற்படுகின்றார்கள் என்பது சிங்கள-முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. இக்குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையிலான சொற்பிரயோகங்களைக் கொண்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தூக்கிப் பிடிப்பதன் ஊடாக தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தலாம் என்று உருத்திரகுமாரனும் அவரது பரிவாரங்களும் இன்று எண்ணுகின்றார்களோ தெரியவில்லை. 

தமிழீழம் என்பது ஒவ்வொரு தமிழர்களின் இதயங்களிலும் நிலைத்து நிற்கும் நெருப்பு. அந்த நெருப்பை மூட்டியவர் தலைவர் பிரபாகரன். அந்த நெருப்பாற்று நதியில் தமிழீழ விடுதலைப் படகைச் செலுத்தி அடுத்த கட்டம் வரை கொண்டு வந்திருப்பவர்கள் அவரது வழிநின்ற மாவீரர்கள். பிரபாகரன் என்ற பெருந்தலைவர் மூட்டிய தீயில் குளிர்காய்வதற்காக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியால் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் காணப்படும் தமிழீழத் தனியரசுக்கான அறிவிப்பின் மீது உண்மையான பற்றுறுதி கொண்டவர்கள் அதனைத் தமிழீழத் தனியரசு மீதான பற்றுதியாக வெளிப்படுத்த வேண்டுமே தவிர, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான உறுதிப்பிரமாணமாக அல்ல. தமிழீழத்தின் கனவுலகப் பிரதமர் இதனைச் செய்யப் போவதில்லை. ஏனென்றால் அதற்கு அவரை இயக்குபவர்கள் விடப் போவதில்லை. ஆனால் அவருடன் இணைந்து இயங்கப் போவதாக அறிவித்திருக்கும் ஏனைய இரண்டு அமைப்புக்களும் என்னதான் செய்யப் போகின்றன?

நன்றி: ஈழமுரசு

கட்டுரை