வடக்கு, கிழக்கில் கண்டனப் போராட்டங்கள்!

July 25, 2017

நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து வடக்கு, கிழக்கில் இன்றும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில், யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் இதன்போது மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

யாழ். தென்மராட்சி – கொடிகாமம் பகுதியில் அனைத்து வர்த்தக நிலையங்களும் பொதுச்சந்தையும் மூடப்பட்டிருந்தன.

நீதிபதி மீதான துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் வர்த்தகர்கள், பொதுமக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி சந்தைத்தொகுதி இன்று பூட்டப்பட்டிருந்ததுடன், வர்த்தக நிலையங்களில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, யாழ். துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைக் கண்டித்து, பொது அமைப்புக்களால் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் பொது அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்டனப் பேரணியில், தாக்குதலில் உயிரிழந்த உப பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகிலும் கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டதுடன், மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில், யாழ். துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைக் கண்டித்து, வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டது.

மூதூர் சட்டத்தரணிகள் சங்கத்தினர், மூதூர் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக வாயில் கறுப்புப்பட்டி அணிந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கல்முனை மனித உரிமை அலுவலகத்திற்கு முன்பாகவும் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.

தாக்குதலில் உயிரிழந்த உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சரத் பிரேமச்சந்திரவிற்கு இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன், கல்முனை மனித உரிமை அலுவலகத்தில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

 

ஈழத்தீவு