வடகொரியாவில் பேருந்து விபத்தில் 30 பேர் பலி

April 23, 2018

வடகொரியாவில் ஹுவாங்காய் சாலையில் சுற்றுலா பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பலியாகி உள்ளனர். அவர்கள் சீனாவை சேர்ந்த சுற்றுலாவாசிகள் என தெரிய வந்துள்ளது.

இதுபற்றி சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், வடகொரியாவில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து சாலை விபத்தில் சிக்கியுள்ளது என தெரிய வந்துள்ளது.  இதில் பலர் பலியாகி இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

சீனாவில் உள்ள அரசு தொலைக்காட்சியின் ஆங்கில சேனல் ஒன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், சுற்றுலா பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்ததில் 30 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்திருந்தது. அதன்பின் அந்த செய்தி நீக்கப்பட்டு விட்டது. ஆனால் ஏராளமானோர் பலியாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

வடகொரியாவில் ஆண்டுக்கு 4.4 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு சுற்றுலா மூலம் வருவாய் கிடைக்கிறது என தென்கொரியாவில் உள்ள அமைப்பு ஒன்று தகவல் தெரிவிக்கின்றது.  வடகொரியாவில் சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களில் 80 சதவீதத்தினர் சீனாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

உலகம்