மனைவியை கொன்று வீட்டில் புதைத்தாரா கணவர்? வெளியான திடுக்கிடும் தகவல்கள்

October 26, 2016

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியிருப்பு ஒன்றில் பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள Orbe நகரில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொலிசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதில் பேசிய இளம்பெண் ஒருவர் தனது தாயாரை தொடர்புக்கொள்ள முடியவில்லை என புகார் அளித்துள்ளார்.

மேலும், குறிப்பிட்ட ஒரு முகவரியை கொடுத்த அவர் அவ்வீட்டில் சோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இத்தகவலை தொடர்ந்து குறிப்பிட்ட வீட்டிற்கு சென்ற பொலிஸ் அதன் பின்புறம் உள்ள தோட்டத்தை தோண்டியுள்ளனர்.

சில மணி நேரத்திற்கு பிறகு நிலத்தில் இருந்து புதைக்கப்பட்ட பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும், இக்கொலை எப்போது நிகழ்ந்தது என தெரியவரவில்லை.

பொலிசாருக்கு தகவல் அளித்த பெண்ணின் பெற்றோர் இவ்வீட்டில் வசித்து வந்ததாகவும், சில நாட்களுக்கு முன்னர் தாயாரை திடீரென காணாமல் போனதாக அவருடைய மகள் தெரிவித்துள்ளார்.

மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் வீட்டில் புதைத்தாரா? அல்லது வேறு விதமாக இக்கொலை நிகழ்ந்திருக்குமா? என பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐரோப்பா