பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்: பீதியில் வெளியேறிய மக்கள்

March 06, 2017

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஒருவர் பலியானதாகவும் சுமார் 50 பேர் காயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள மிண்டானாவோ தீவு கூட்டம் பகுதியில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 6 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுக்கோலில் 5.9 அலகுகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக அடுத்தடுத்து நில அதிர்வுகளும் உணரப்பட்டது.

சுரிகாவ் நகரத்தில் உள்ள பல வீடுகள், கடைகள் மற்றும் பிரதான சாலைகள் இந்த நிலநடுக்கத்தால் சேதம் அடைந்தன. இந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு ஒரு பெண் பலியானார்.

சுமார் 50 பேர் படுகாயம் அடைந்தனர். ஏராளமான சொத்துகளுக்கு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது என உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மாதம் 10 ஆம் திகதி ஏற்பட்ட 6.5 அலகிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து இப்பகுதியில் நூற்றுக்கணக்கான நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. குறித்த நிலநடுக்கத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர், 250க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு இப்பகுதில் 7.1 என்ற அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 220 பேர் உயிர்ழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம்