பரட்டைக்காட்டுக்கு கரட்டி ஓணான் பஞ்சவர்ணக்கிளி

January 24, 2016

தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டம் என்றொரு பழமொழி நம் தமிழ்மொழியில் உண்டு.

சிறுவயதில் இப் பழமொழியைப் படித்தபோது அதன்பொருளை விளங்குவதில் கடினம் இருந்தது. காரணம் உதாரணங்களை கண்டறிய முடியவில்லை.

ஆனால் இப்போது இந்தப் பழமொழியின் பொருள் அப்படியே உள்வாங்கப்படுகிறது. காரணம் வடக்கு மாகாண சபையில் உள்ள சில உறுப்பினர்கள் ஆடுகின்ற ஆட்டமே இதற்கு நல்ல உதாரணமாக இருப்பதால்.

வடக்கு மாகாண சபையின் செயற்பாட்டைக் குழப்புவதில் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் மிகமோசமான-அடாவடித்தனமான முறையில் செயற்பட்டு வருகின்றனர். தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துவரும் வட க்கு மாகாண சபையின் முதலமைச்சருக்கு எதிர்ப் புத் தெரிவிக்கும் வகையில் இவர்களின் செயற்பாடுகள் அமைந்திருப்பது உறுதியாகியுள்ளது.

அதிலும் கடந்த தைப்பொங்கல் தினத்தன்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் மிக உன்னதமான உரை ஒன்றை பிரதமர் ரணில், பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இருந்த அரங்கில் ஆற்றியிருந்தார். முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய இந்த உரை உலகத்தமிழினம் முழுமையினதும் கவன த்தை ஈர்ப்புச் செய்திருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த; இலங்கை அரசுக்கு ஆதரவான; வன்னிப்போரில் மகிந்த ராஜபக்ச ­ வெற்றி பெற வேண்டும் என அல்லும் பகலும் பாடுபட்டவர்கள் என இனங்காணப்பட்ட; வடக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பில் இருக்கக்கூடிய நான்கு, ஐந்து மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் முதலமைச்சராக இருந்தால் அது தமிழினத்துக்குப் பலமாக அமையும் என்ற அடிப்படையில், அவருக்கு எதிராகத் தீர்மானங்களைக் கொண்டு வருவதில் கடுமையாக முயற்சி செய்கின்றனர்.

இவர்களின் நடவடிக்கையால் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழர் அரசு என்ற அடிப்படையில் அமையப் பெற்ற வடக்கு மாகாண சபையில் இருந்து கொண்டு மாகாண சபையை குழப்புவதற்கு இவர்கள் செய் கின்ற சதித்திட்டம் தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப்பெரும் துரோகத்தனமாகும்.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களுக்கான உரிமையை அரசு உரியவாறு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பது இவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது என்பதை தமிழ் மக்கள் நிச்சயம் அவதானிப்பர்.

இதேவேளை வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்களாக இருந்து கொண்டு, முதலமைச்சர் விக் னேஸ்வரனுக்கு எதிராகத் தொடர்ந்தும் செயற்பட்டு வரும் வடக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பின்- தமிழரசுக் கட்சி சார்ந்த சில உறுப்பினர்கள் தொடர்பில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொறுப்புடன் நடக்க வேண்டிய சபை உறுப்பினர்கள் சபையில் சண்டித்தனக்காரர்களாக குழப்பம் விளைவிப்பவர்களாக நடந்து கொள்வது அவ்வளவு நல்லதல்ல என்பதை சம்பந்தப்பட்ட உறுப்பின ர்களுக்கு எடுத்துரைக்கவேண்டும்.

இதைச் செய்யாமல் விட்டால், பரட்டைக்காட்டுக்கு கரட்டி ஓணான் பஞ்சவர்ணக் கிளி என்பதாக நிலைமை ஆகிவிடும். இந்நிலைமை ஏற்பட்டால் தமிழ் மக்கள் உரிய நேரத்தில் தக்க பாடம் புகட்டுவர்.

நீங்கள் தெரிவு செய்தவர்களின் செயற்பாட்டை அவதானியுங்கள்

தேர்தலில் வாக்களிப்பதோடு எங்கள் கடமை முடிந்து விடுகிறது என்ற நினைப்பை மக்கள் கொண்டி ருப்பதால்தான் மக்கள் பிரதிநிதிகள் தமக்கு வாக்களித்த மக்களை மறந்து விடுகின்றனர்.

வாக்களிப்பது மட்டுமே எங்கள் உரிமை என்பதாக நிலைமை இருந்தால், இந்த யுகத்தில் தமிழினம் விமோசனம் பெறமுடியாது.

எனவே நாங்கள் வாக்களித்த பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள்? அவர்களின் பணி என்ன? தேர்தலில் வெற்றியடைந்த பின்பு எத்தனை தடவைகள் மக் களைச் சந்திக்க இவர்கள் வருகின்றனர் போன்ற விடயங்களைக் கவனிப்பதுடன் பாராளுமன்றத்தில்; மாகாண சபையில் இந்த உறுப்பினர்கள் எந்தளவு தூரம் நாகரிகமாக நடந்து கொள்கின்றனர் என்பதை அறிந்து கொள்வதும் அவசியம்.

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் எது செய்தாலும் அது சரி என்றோ; இவர்கள் தொடர்பில் ஊடகங்கள் தெரிவிப்பவைதான் உண்மையானவை என்றோ மக்கள் நினைத்தால், அது மிகப்பெரும் கேட்டைத் தரும். எனவே தங்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டை மக்கள் நேரடியாக அவதானிக்க வேண்டும்.

தமது பிரச்சினைகள் தொடர்பில் தங்கள் பிரதிநிதிகளை சந்தித்து மக்கள் முறையிட முடியுமா? அதற்கான ஏற்பாடுகள் உண்டா? என்பன பற்றியும் மக்கள் அறிவது மிகமிகக் கட்டாயமானதாகும். இதற்கு மேலாக ஊடகங்களில் வருகின்ற செய்திகள், கட்டுரைகள் தொடர்பில் மக்கள் மெய்ப்பொருள் காணவேண்டும்.

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்கிறார் வள்ளுவர்.

ஆக, பக்கச்சார்புடைய ஊடகங்கள் பலதையும் கூறிக்கொள்ளும். அதுபற்றி மக்கள் அலட்டிக் கொள்ளாமல் எது உண்மை ; எது பொய்; எது கற்பனை என்பவற்றை கண்டறியும் போது ஊடகங்களும் நிச்சயம் நடுவுநிலைத்தன்மைக்கு வந்தாக வேண்டும்.

ஆகையால் அனைத்து செம்மைக்கும் அடிப்படை மக்கள் விழிப்பாக இருப்பதுதான். மக்களை விழிப்பு நிலையில் வைத்திருப்பதற்கு மக்கள்அமைப்புகள் கடுமையாகப் பாடுபடவேண்டும். நேற்றையதினம் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தன்னை மிகமோசமான வார்த்தைப் பிர யோகங்களால் திட்டினார் என்று மிகுந்த கவலையுடன் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, போரின் இறுதியில் படையினரால் கூட்டிச் செல்லப்பட்டு காணாமல் போன ஒரு போராளியின் மனைவிக்கு இதுவே கதி என்றால், அதிலும் மாகாண சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவரே அவரைக் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டினார் எனில், இவர்களின் பதவி எதற்கானது? இவர்களால் மக்களுக்கு ஏற்படக் கூடிய நன்மை என்ன? என்பது பற்றி அரசியல் தலை மைகள் சிந்திக்கவும் பெண்கள் அமைப்புகள் கவனம் செலுத்தவும் தயாராக வேண்டும்.

கூடவே ஊடகங்கள் யார் பக்கமும் சாராமல், காணாமல்போன ஒரு போராளியின் மனைவியை -வடக்கு மாகாண சபையின் உறுப்பினரை, இன்னொரு உறுப்பினர் தகாத வார்த்தையால் திட்டினாரா? என்பதை இருதரப்பிடமும் கேட்டறிந்து அவற்றை வெளிப்படுத்த வேண்டும். இதைப் பக்கச் சார்பற்று நீதியோடும் நடுநிலையோடு செய்வது கட்டாயமானதாகும்.

இவற்றுக்கும் மேலாக, தங்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பது பற்றி சிந்திக்கவேண்டியவர்கள் தமிழ் மக்களே அன்றி வேறு யாருமிலர்.

ஆக, எச் சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் தங்களுடன் தொடர்புபட்ட அனைத்துத் தளங்களிலும் விழிப்பாக இருப்பதென்பது அவசியமாகும். அப்போது தான் மக்கள் பிரதிநிதிகள் தமக்குரிய கடமைகளை-பொறுப்புக்களை உணர்ந்து அதற்கு ஏற்றால்போல் செயற்படுவர்.

வலம்புரி

இணைப்பு: 
கட்டுரை