பதவி விலக மறுத்த அரசு வழக்கறிஞருக்கு நேர்ந்த கதி: ஜனாதிபதி டிரம்ப் அதிரடி

March 13, 2017

பதவி விலக மறுத்த இந்திய வம்சாவளி அரசு வழக்கறிஞர் பிரீத் பராராவை ஜனாதிபதி டிரம்ப் நீக்கி, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ஆம் திகதி பதவி ஏற்ற பின்னர், முந்தைய ஒபாமா அரசால் நியமிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரையும் நீக்கி, புதிய நியமனங்களை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் பணியாற்றி வந்த மத்திய அரசு வழக்கறிஞர்கள் 46 பேரை பதவி விலகுமாறு டிரம்ப் நிர்வாகம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதற்கான உத்தரவை முறைப்படி அமெரிக்க அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் பிறப்பித்தார்.

இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நியூயார்க் தெற்கு மாவட்ட மத்திய அரசு வழக்கறிஞர் பிரீத் பராராவும் இடம் பெற்றார். இது அங்கு பலருக்கு வியப்பை தந்தது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் டிரம்பை அவரது நியூயார்க் டிரம்ப் டவரில் பிரீத் பராரா சந்தித்து பேசினார். அப்போது டிரம்ப் அவரை நியூயார்க் தெற்கு மாவட்ட மத்திய அரசு வழக்கறிஞராக தொடரும்படி கேட்டுக்கொண்டார். அவரும் அதை ஏற்றார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து பிரீத் பராரா கூறும்போது, “டிரம்புடனான சந்திப்பு நல்ல முறையில் அமைந்தது. பதவியில் தொடருவதற்கு நான் சம்மதித்துள்ளேன். அமெரிக்காவின் அட்டார்னி ஜெனரலாக நியமிக்கப்பட உள்ள ஜெப் செசன்சுடனும் நான் பேசினேன். அவரும் என்னை பதவியில் தொடரும்படி கேட்டுக்கொண்டார். நான் நியூயார்க் தெற்கு மாவட்ட மத்திய அரசு வழக்கறிஞராக தொடருவேன் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மற்றவர்களுடன் தன்னையும் பதவி விலகுமாறு டிரம்ப் நிர்வாகம் கூறியதை பிரீத் பராரா ஏற்க மறுத்து விட்டார். இதையடுத்து அவரை டிரம்ப் அதிரடியாக நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதை பிரீத் பராரா டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

அதில் அவர், “நான் பதவி விலகவில்லை. சில நிமிடங்களுக்கு முன் நான் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன். நியூயார்க் தெற்கு மாவட்ட மத்திய அரசு வழக்கறிஞராக பணியாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பை என் பணி வாழ்வில் மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு முன்னதாக டிரம்ப், தனது உதவியாளர் மூலம் பராராவை தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார், ஆனால் பராரா, தான் டிரம்புடன் பேசப்போவதில்லை என்று அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்சுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், டிரம்ப் உதவியாளரையும் அவர் தொடர்பு கொண்டு, தான் ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு பேசுவது மரபு நெறிமுறையை மீறிய செயலாக அமையும் என கூறி விட்டார். அதைத் தொடர்ந்தே பிரீத் பராரா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள இவர், பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா