நாளுக்கு நாள் கேள்விக்குறியாகும் சமகால அரசியல் நிலைமை..

January 11, 2017

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று கூறுவார்கள். அரசாங்கத்தில் உள்ள ஒரு சில உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துக்கள் அரசாங்கத்தின் வங்குரோத்து நிலையை நன்கு படம்போட்டு காட்டுகிறது.

ஒரு புறம் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, தேசிய நல்லிணக்க அரசாங்கம் தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவே போட்டியிடுவார் என்று அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அவ்வாறான ஒரு தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தெரிவித்திருக்கிறார்.

இது அமைச்சர் திஸாநாயக்கவின் கூற்றுக்கு எதிர்ப்பாகவே தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் பிரதமர் தனி அதிகாரத்துடன் சீன கம்பனிகளுடன் ஒப்பந்தங்களை செய்து வருகிறார். இந்த நாட்டை யார் ஆட்சி செய்கிறார் என்பது தெளிவற்ற விடயமாக உள்ளது.

இதற்கிடையில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தமக்கு தெரிந்த இராமாயணத்தை வெளியிட்டு வருகிறார்.

ஆனால் ஆட்சி கவிழ்க்கப்படும் என்று ஒரு தடவை மகிந்த ராஜபக்ஸ தெரிவித்ததன் பின்னரே, இந்த பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை.

ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல உறுப்பினர்கள் மகிந்தவின் கூற்றுக்கு பலவாறாக பதில் வழங்கிவிட்டனர்.

அதே வேளை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியை முழுமையாக தள்ளி விட்டால் அல்லது ஓரங்கட்டினால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான தனி ஆட்சியை அமைக்க, முழு ஆதரவு தருவோம் என்று கூறியுள்ளனர்.

அப்படி கூறி சில மணித்தியாலங்களில் விமல் வீரவங்ச நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்படி பார்க்கும்போது FCID எனும் நிதி மோசடி விசாரணை பிரிவு ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயல்படுகிறதா? என எண்ணத் தோன்றுகிறது.

ஏற்கனவே இந்த பிரிவின் பணிப்பாளர் பதவி உயர்வு பெற்று இடம்மாற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

மறுபுறத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது இருப்பு குறித்து ஒரு அச்சம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் கூறியுள்ளார்.

அண்மையில் அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற இடம்பெற்ற சம்பவம் குறித்து பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்றாலும் அதில் இருந்து எந்தவித முடிவும் வெளியாகவில்லை என்பது தெளிவு.

இது இவ்வாறு இருக்க, தகவல் ஊடகத்துறை அமைச்சு ஊடகவியலாளர்களுக்கு ஆளில்லா விமான தொழில்நுட்பம் மூலம் தகவல்களை வழங்க ஏற்பாடுகளை செய்துள்ளது.

ஆளில்லா விமான தொழில்நுட்பத்திற்கு அமெரிக்காவே மிகவும் பிரபல்யம் பெற்றது. அமெரிக்கா இந்த தொழில்நுட்பத்தை எதிரியின் இலக்குகளை அடையாளம் காணவும் எதிரி தொடர்பான தகவல்களை பெறவும் பயன்படுத்தி வந்தது.

ஆனால் இப்போது இந்த தொழில்நுட்பம் ஒரு சம்பவத்தின் இடம், காலம் மற்றும் ஏனைய தகவல்களை பெற்றுக் கொள்ள பயன்படுத்தப்படுகிறது.

இது பொது மக்களின் அந்தரங்க வாழ்கைக்கு குந்தகம் ஏற்படுத்துமா என்பது கேள்வி.

ஆங்கிலத்தில் ட்ரோன் எனும் இந்த தொழில்நுட்பம் ஊடக தர்மத்தை மீறுகிறதா? ஊடக விழுமியங்களை பாதிக்குமா என்பது கேள்விதான்.

ஈழத்தீவு