ஜேர்மன் தலைநகரில் தாக்குதல் நடத்த முயன்ற நபர் அதிரடி கைது

April 10, 2017

ஜேர்மன் தலைநகரான பெர்லினில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய நபர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைநகரான பெர்லினில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என கடந்த பெப்ரவரி 8-ம் திகதி பொலிசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இத்தகவலை தொடர்ந்து பொலிசார் இச்சதி திட்டத்தில் ஈடுப்பட்டுள்ள நபரை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், Leipzig நகருக்கு அருகில் உள்ள Borsdorf என்ற பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் பொலிசார் நேற்று முன் தினம் அதிரடி சோதனையை நிகழ்த்தியுள்ளனர்.

அப்போது, 25 வயது மதிக்கத்தக்க மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி 8-ம் திகதி பெர்லினில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட நபரும் இவர் தான் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், நபரின் வீட்டை சோதனை செய்தபோது அங்கு வெடிகுண்டுகளை தயார் செய்ததற்கான ஆதாரங்களும் பொலிசாருக்கு கிடைத்துள்ளன.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நபருக்கும் தீவிரவாத அமைப்பிற்கும் தொடர்புள்ளதா என பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சுவீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் இரண்டு தினங்களுக்கு முன்னர் லொறியில் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் வரை கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா