சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர் தம்பிப்பிள்ளை நமசிவாயம்

January 24, 2016

சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர் திரு. தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்களை வெற்றியடைய வைப்பது தமிழர்களின் கடமை!!!

பெருமதிப்பிற்குரிய தமிழீழ மக்களே!!!

நாம் வாழும் சுவிஸ் நாட்டின் Lausanne மாநகரசபைத் தேர்தல் எதிர்வரும் February மாதம் 10 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஈழத்தமிழர் திரு. தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்கள் சோஸலிச சனநாயகக் கட்சியின் சார்பில் (Parti socialiste suisse - PS) போட்டியிடுகிறார். சுவிஸ் நாட்டின் 4 வது பெரிய நகரான Lausanne மாநகரத்தின் மாநகரசபையானது அரசியற் செல்வாக்கு நிறைந்த மாநகரசபையாகும். 100 பேர் அடங்கிய மாநகரசபையில் நீண்ட காலமாக தனி ஓர் ஈழத்தமிழனாய் திரு. தம்பிப்பிள்ளை நமசிவாயம அவர்கள் அங்கம் வகிப்பதுடன் தமிழர்களுக்கும், வேற்றுநாட்டவர்களுக்கும் சேவை செய்து வருகின்றார்.

தமிழர்கள் நாம் வாழும் நாடுகளில் அரசியல் ரீதியாக பலமடைவதன் ஊடாகவே நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். திரு. தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்கள் தமிழர்களின் மறுக்கப்படும் உரிமைகளுக்காக தனது இளமைக்காலம் முதல் இன்றுவரை களத்தில் பணிபுரிகிறார். அரசியல் ரீதியாக தாயகத்திலும் புலத்திலும் வலுவிழந்த சமுதாயமாகவிருக்கும் எம்மத்தியில் வலுவான இரும்புக் குரல்களாக ஒலிக்கும் ஒருசிலரில் திரு. தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்களும் ஒருவர். உதவி கேட்கும் எவருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி செய்துகொடுப்பது அவரின் இயல்பான குணம். அதையும் தாண்டி ஐநா முன்றலில் ஒலிக்கும் இன்றுவரையான தமிழரின் குரலிற்கு பின்னாலும், தமிழர்கள் சார்ந்து சுவிஸ் அரசியலில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களிற்கு பின்னாலும் திரு. தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்களின் உழைப்பு பெரிதும் இருந்திருக்கின்றது. அது மட்டுமில்லாமல் எதிர்காலத்திலும் இருக்கும் என்பதிலும் மாற்றமில்லை.

அத்துடன் சுவிஸ் வாழ் தமிழீழ மக்களின் சனநாயக அரசியல் குரலான சுவிஸ் ஈழத்தமிர் அவையிலும் Vaud - Lausanne மாநில பிரதிநிதியாக அங்கம் வகித்து வருகிறார்.

அவரை தெரிவுசெய்வதால் என்னபலன் என்று அலட்சியமாய் இருந்துவிடாமல் எமது தேசிய இருப்பிற்கும் அதன் எழுச்சிக்கும்  திரு. தம்பிப்பிள்ளை நமசிவாயம் போன்றவர்களின் பங்கும் ஓர் அத்தியாவசியமானது என்பதை உணர்ந்து ஓரு தமிழனுக்காக வாக்களிக்கவும்.

வேறு மாநிலங்களில் உள்ள தமிழர்கள் Lausanne மாநகரத்தில் உள்ள உங்கள் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி அதிகூடிய வாக்குகளுடன் ஓரு  ஈழத்தமிழனை உரிமையுடன் தேசியம் நிலைக்க அதிகாரபீடம் ஏற்றுங்கள்.

வாக்களிக்கும் போது அவதானிக்க வேண்டியவை:

  Parti socialiste suisse - PS       பொறிக்கப்பட்டிருக்கும் வாக்குச்சீட்டில் எழுதப்பட்டிருக்கும்  திரு. தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்களின் பெயரின் கீழ் மீண்டும் ஒருமுறை அவருடைய பெயரையும் வாக்கிலக்கங்களையும் எழுதுவதன்மூலம் 2 வாக்குகளை நீங்கள் அளிக்கலாம்.
அல்லாவிடில் அவருக்கு அதிகூடிய வாக்குகளை அளிப்பதற்கு வேறொரு வழி உண்டு: கட்சிகளின் பெயர் அச்சடிக்கப்படாமல் இருக்கும் வாக்குச் சீட்டின் மேற்பகுதியில் திரு. தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்களின் கட்சியான P.S ஐ எழுதிவிட்டு கீழே பெயர்கள் எழுத ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் 2 முறை திரு. தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்களின் வாக்கிலக்கத்தையும், பெயரையும் எழுதினால் முழுமையாக உங்களது வாக்கை திரு. தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்களுக்கு வழங்கலாம்.
February 10 ஆம் திகதியளவில் வாக்குச் சீட்டுக்கள் தபால் மூலம் உங்கள் வீடுகளை வந்தடையும். இறுதி நாள்வரை காலம்தாழ்த்தாமல் உடனே நிரப்பி      அனுப்பவும். அல்லாவிடில் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்குப் பெட்டிகளுக்குள் போடவும். தபால் மூலம் இறுதிநாள் அனுப்பினால் வாக்குச்சீட்டு செல்லுபடியற்றதாக மாறிவிடும்.
திரு. தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்கள் சென்ற தேர்தலில் 5813 வாக்குகளை பெற்றார். இம்முறை அதைவிட கூடுதலான வாக்குகளை பெறுவதற்கு எங்கள் கரங்கள் ஒன்றாக வேண்டும்.

நன்றி 
சுவிஸ் ஈழத்தமிழரவை

புலத்தில்