சமூக வலைத்தளங்களுக்கு கடும் அபராதம்: அரசு அதிரடி அறிவிப்பு

April 05, 2017

ஜேர்மனி நாட்டில் சட்டவிரோதமான தகவல்களை நீக்காத சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் புதிய சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஜேர்மனியில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சரான Heiko Maas என்பவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜேர்மனியில் புகலிடம் கோரி வருபவர்கள் மீதான இனவெறி தாக்குதல் மற்றும் பிற சட்டவிரோதமான தகவல்களை பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இவற்றை சமூக வலைத்தளங்கள் முழுமையாக நீக்குவதில்லை. இதனால், சமுதாயத்தில் கலாச்சார சீரழிவு நிகழ்வதுடன் ஜேர்மனியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது.

சட்டவிரோதமான தகவல்களை உடனுக்குடன் நீக்க சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவுறத்தப்பட்டுள்ளது.

இவற்றில் பேஸ்புக் 50 சதவிகிதமும், யூடியூப் 90 சதவிகித சட்டவிரோத தகவல்களை உடனுக்குடன் நீக்குகிறது. ஆனால், ட்விட்டரில் இதுபோன்ற நடவடிக்கைகள் முற்றிலுமாக எடுக்கப்படுவதில்லை.

மக்களுக்கு கருத்துரிமை இருந்தாலும் கூட அவை மற்றவர்களை பாதிக்க கூடாது. இனவெறியை தூண்டி பெரும் இன்னல்களுக்கு உள்ளாகக்கூடாது.

எனவே, இதுபோன்று சட்டவிரோதமான தகவல்களை வெளியிட்டால் அவற்றை நிறுவனங்கள் உடனடியாக நீக்க வேண்டும்.

இந்நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 50 மில்லியன் யூரோ வரை அபராதம் விதிக்க நேரிடும் எனவும் Heiko Maas எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பா