காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 6 போலீசார் பலி!

June 16, 2017

தெற்கு காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் போலீஸ் படையை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி பெரோஸ் உள்பட 6 போலீசார் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீசார் காயமும் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட அவர்கள் உயிருக்கு போராடி வருகிறார்கள். இதற்கிடையே அப்பகுதிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டு உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸ் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது இன்று தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் இத்த தாக்குதலை நடத்தி உள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிகாரிகள் தரப்பிலும்  லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள்தான் தாக்குதல் நடத்தி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் மீது நடத்தப்பட்ட இடத்தை ராணுவம் சுற்றி வளைத்து உள்ளது.  

பழிவாங்கும் தாக்குதல்

காஷ்மீரின் பிஜ்பெகாரா பகுதியில் அர்மானி கிராமத்தில் உள்ள வீட்டில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் பாதுகாப்பு படைகள் அப்பகுதியை முற்றுகையிட்டன.

ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் இணைந்து பயங்கரவாதிகள் தங்கியிருந்த பகுதியினை இன்று காலை சுற்றி வளைத்தனர். அப்போது இருதரப்பு இடையே சண்டை தொடங்கி மாலை வரையில் நீடித்தது. இருதரப்பு இடையே நடைபெற்று வரும் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் ஜுனைத் மாட்டோ உள்பட இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்னும் ஒரு பயங்கரவாதியை சுட்டு வீழ்த்த சண்டை தொடர்ந்து வருகிறது என தகவல்கள் வெளியாகியது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இப்போது அந்த இயக்கம் தாக்குதல் நடத்தி உள்ளதாக போலீஸ் தெரிவித்து உள்ளது.

காலை 10 மணியளவில் வீட்டிற்குள் இருந்த வண்ணம் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதலை தொடங்கினர். பதிலடி தாக்குதலை பாதுகாப்பு படைகளும் தொடங்கியது. இதற்கிடையே பயங்கரவாதிகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொதுமக்களை பாதுகாப்பு படைகள் விரட்டியது. இதில் 5 பேர் பெல்லட் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படைகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

உலகம்