காரில் வந்த இளம்பெண்ணை கற்பழித்த ஓட்டுனர்: கடுமையான தண்டனை விதிக்கப்படுமா?

February 16, 2017

அவுஸ்திரேலியா நாட்டில் காரில் வந்த பயணி ஒருவரை ஓட்டுனர் கொடூரமாக கற்பழித்துள்ள சம்பவத்தில் அவரது குற்றம் தற்போது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முகமது நவீத்(41) என்பவர் அவுஸ்திரேலியாவில் உபெர்(Uber) கார் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு Kings Cross இரவு விடுதியில் இருந்து இளம்பெண் ஒருவர் இவரது காரில் ஏறியுள்ளார்.

விடுதியில் மது அளவுக்கு அதிகமாக குடித்திருந்த காரணத்தினால் காரில் ஏறியதும் அவர் சுயநினைவை இழந்துள்ளார்.

சில மணி நேரத்திற்கு பின்னர் சுயநினைவு திரும்பியபோது தான் நிர்வாணமாக காரில் இருப்பதும் தன்னுடன் ஓட்டுனரும் அதே நிலையில் இருப்பதை பார்த்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும், தான் சுயநினைவு இல்லாமல் இருந்தபோது ஓட்டுனர் தன்னை கற்பழித்த உண்மையை அறிந்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

எனினும், மதுபோதையில் இருந்த இளம்பெண் தான் உறவுக்கு அழைத்ததாகவும், இருவரின் விருப்பத்தின் அடிப்படையில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஓட்டுனர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில், விசாரணையின் இறுதிக்கட்டம் நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, சுமார் 3 மணி நேரம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்றதை தொடர்ந்து இறுதியில் இளம்பெண்ணை கற்பழித்தது உண்மை என ஓட்டுனர் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஓட்டுனர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இறுதி தீர்ப்பை எதிர்வரும் மே மாதத்திற்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா