கவனக்குறைவு காரணமாக இருவர் பலி: சாலையில் நிகழ்ந்த பயங்கரம்

April 05, 2017

சுவிட்சர்லாந்து நாட்டில் கவனக்குறைவு காரணமாக சாலை விபத்தில் சிக்கி இருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Schwarzwaldstrasse நகரில் நேற்று காலை நேரத்தில் 62 வயதான நபர் ஒருவர் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, சாலையில் சரக்கு லொறி ஒன்று அவரை பின் தொடர்ந்து வந்துள்ளது.

சில நிமிடங்களுக்கு பிறகு ஒரு வளைவில் லொறி திரும்பியபோது பின்னால் சைக்கிளில் வேகமாக வந்த நபர் லொறியின் பின் சக்கரத்தில் சிக்கியுள்ளார்.

கண் இமைக்கும் நேரத்தில் லொறி அவர் மீது ஏறிச் சென்றுள்ளது. இவ்விபத்தில் சைக்கிளில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

இதே போல், பேர்ன் மாகாணத்தில் உள்ள Lyssach நகரில் 46 வயதான நபர் ஒருவர் சிறிய கார் ஒன்றில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பயணம் செய்துள்ளார்.

வரையறுக்கப்பட்டதை விட கார் அதிக வேகத்தில் சென்றுள்ளது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார் சாலையின் மையத்தில் இருந்த தடுப்பு கம்பி மீது பலமாக மோதியுள்ளது.

இவ்விபத்தில் கார் அப்பளம் போல் நொருங்கியது மட்டுமில்லாமல், காரின் இருக்கைகள் வெளியேறும் வகையில் சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் காருக்குள் இருந்த நபரை வெளியே கொண்டு வந்தனர். ஆனால், விபத்து மோசமானதாக இருந்ததால் ஓட்டுனர் உடல் நசுங்கி ஏற்கனவே உயிரிழந்துள்ளார்.

இவ்விரு விபத்துக்களுக்கும் கவனக்குறைவு மட்டுமே காரணமாக கூறப்படுகிறது. இரு விபத்துக்கள் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐரோப்பா