கனவை நனவாக்கிக்கொண்ட ‘டௌன் சிண்ட்ரோம்’ ஃப்ரான்ஸைச் சேர்ந்த பெண்!

March 09, 2017

மரபணுக் குறைபாட்டால் ஏற்படும் ‘டௌன் சிண்ட்ரோம்’ நோயால் பாதிக்கப்பட்ட பெண், முதன்முறையாக தொலைக்காட்சியொன்றில் வானிலை அறிவிப்பாளராகப் பணியாற்றவிருக்கிறார்.

ஃப்ரான்ஸைச் சேர்ந்த மெலானி செகார்ட் என்ற 21 வயதுப் பெண் டௌன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர். இவருக்கு, தனது குறைபாட்டை மறந்து புகழ் பெற்ற பெண்ணாக வாழ வேண்டும் என்று ஆசை. அதற்கு, தொலைக்காட்சியில் வானிலை அறிக்கை வாசிக்க விரும்பினார். குறைவான நேரமே வாசிக்க வேண்டும் என்பதாலேயே அவர் வானிலை அறிக்கை வாசிப்பதை விரும்பினார்.

தனது விருப்பத்தை முகநூல் வழியாகப் பதிவுசெய்தார். இரண்டே வாரங்களில் இவரது பதிவுக்கு இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான ‘லைக்’குகள் கிடைத்தன.

இந்தப் பதிவை தற்செயலாகப் பார்த்த ‘ஃப்ரான்ஸ் 2’ என்ற அரச தொலைக்காட்சி தொகுப்பாளர், மெலானியின் விருப்பம் குறித்து தனது உயரதிகாரிகளிடம் தெரிவித்தார். உடனடியாக மெலானியை சந்தித்த தொலைக்காட்சி நிறுவனம், அவருக்குத் தேவையான பயிற்சிகளைத் தற்போது வழங்கிவருகிறது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மெலானி ஃப்ரான்ஸ் 2 தொலைக்காட்சி அலைவரிசையில், பிரதான நேரச் செய்தியறிக்கையின்போது வானிலை அறிக்கை வாசிக்கவுள்ளார்.

டௌன் சிண்ட்ரோம் என்பது மரபணுக் குறைபாட்டால் ஏற்படும் ஒரு நோய். இது, உடல் மற்றும் மன வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியது. ஆயிரத்தில் ஒருவருக்கு இந்த நோய் தோன்றுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது

 

Videos: 
கனடா